தொண்டி அருகே அரசு பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப மறுத்து பெற்றோர் போராட்டம்




தொண்டி அருகே அரசு பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப மறுத்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெற்றோர் போராட்டம்

திருவாடானை தாலுகா தொண்டி அருகே முகிழ்தகம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் காலை உணவு சமைக்கும் பணியாளர் ஒருவர் குழந்தைகளை அவதூறாக பேசியதாக கூறி நேற்று முன்தினம் பள்ளி முன்பு ஏராளமானோர் குவிந்தனர்.

மேலும் பள்ளியில் தங்களது குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே எங்கள் குழந்தைகளை மாற்று பள்ளியில் சேர்த்து கொள்கிறோம் என கூறி குழந்தைகளை பெற்றோர் தங்களுடன் அழைத்து சென்றனர். தொடர்ந்து அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் நேற்று காலை முகிழ்தகம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மாவட்ட கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ், வட்டார கல்வி அலுவலர் புல்லாணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அதிகாரிகள் சமரசம்

அப்போது குழந்தைகளின் பெற்றோர் சிலர் தங்களது குழந்தைகளின் உயிருக்கு இப்பள்ளியில் பாதுகாப்பு இல்லை என்றும், இதனால் காலை உணவு சமைக்கும் 3 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், வருவாய் ஆய்வாளர் மேகமலை, கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் கண்ணன், சப்- இன்ஸ்பெக்டர் முருகன், ஊரக வாழ்வாதார இயக்க வட்டார மேலாளர் ஷீலா, மற்றும் ஊராட்சி தலைவர் மல்லிகா கர்ண மஹாராஜா ஆகிேயார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதிகாரிகளின் பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படவில்லை. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உணவு சமைக்கும் பணியாளர்கள் 3 பேரையும் பணிநீக்கம் செய்யாவிட்டால் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என கூறி கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பள்ளியில் 108 மாணவ- மாணவிகள் படித்து வரும் நிலையில், நேற்று 68 மாணவ, மாணவிகள் மட்டுமே வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments