அரசுப்பள்ளிகளில் படித்து உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கல்விச் செலவை அரசே ஏற்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு




அரசு பள்ளிகளில் படித்து இந்தியாவில் உள்ள முன்னணி உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கல்விச் செலவை தமிழக அரசே ஏற்கும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

பாராட்டு விழா

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு படிக்கச் சென்ற அரசு பள்ளி மாணவ-மாணவிகளை பாராட்டும் விழா சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நேற்று நடந்தது.

இந்த விழாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

இந்த ஆண்டில் இந்தியாவில் உள்ள முதன்மை கல்வி நிறுவனங்களில் 447 மாணவ-மாணவிகளும், வெளிநாடுகளில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் 14 மாணவ-மாணவிகளும் என மொத்தம் 461 பேர் உயர்கல்வி படிக்கச் செல்கின்றனர். அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் மடிக்கணினிகளை, விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மேலும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேவாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) வாயிலாக பள்ளிக் கல்வித் துறையில் 448 உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் 5 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் அவர் வழங்கினார்.

கல்வித்துறையில் மறுமலர்ச்சி

விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

உலகின் அறிவுச்சொத்துக்களான இந்த மாணவர்களை பார்க்கும்போது எனக்கு உள்ளபடி பெருமையாக இருக்கிறது. ஏறத்தாழ, 10 ஆண்டுகளுக்குப் பிறகு நம்முடைய அரசுப்பள்ளி குழந்தைகள், இந்தியாவின் முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களுக்கு நாம் ஆட்சிக்கு வந்த இந்த 3 ஆண்டுகளில் சாரை சாரையாக படிக்கப்போகிறார்கள்.

2022-ம் ஆண்டு 75 மாணவர்கள். 2023-ம் ஆண்டு 274-ஆக ஆனது. இந்த ஆண்டு, அது மேலும் இரண்டு மடங்காகி, 447 மாணவர்கள் இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

இன்னமும் பல நிறுவனங்களில் சேர்க்கை நடத்தி முடிக்கவில்லை. அதனால், இந்த எண்ணிக்கை இன்னும் தினமும் அதிகரிக்கும். நான் தொடங்கி வைத்த மாதிரிப் பள்ளிகளில் தொடங்கிய இந்தப்பயணம், இன்றைக்கு தமிழ்நாட்டின் அனைத்து அரசுப்பள்ளிகளுக்கும் விரிவடைந்திருக்கிறது. நம்முடைய திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு அனைத்துத் துறைகளுமே மலர்ச்சி அடைந்திருக்கிறது. அதிலும், கல்வித்துறை மறுமலர்ச்சி அடைந்துள்ளது.

34 சதவீதம் உயர்வு

உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளது. நாம் தொடங்கிய புரட்சிகரமான புதுமைப்பெண் திட்டத்தின் பயனாக, கல்லூரியில் சேருகின்ற மாணவிகளின் எண்ணிக்கை 34 சதவீதம் உயர்ந்திருக்கிறது. ஏராளமானோருக்கு உயர்கல்வி நிறுவனங்களில் இடம் கிடைத்தது. இதற்கெல்லாம் அடித்தளம் அமைத்தது கல்வித்துறையின் செயல்பாடுகள்.

அதில் முக்கியமானது, இந்தக் காலச்சூழலுக்கு ஏற்ப தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கற்பிக்கும் முறையை நவீனமாக்கியது. இதன் விளைவாகதான், நம்முடைய மாணவர்கள் இன்றைக்கு நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கப்போகிறார்கள். முதன்மை உயர்கல்வி நிறுவனங்கள் என்றால் ஐ.ஐ.டி., என்.ஐ.டி. மட்டுமல்ல, தேசிய சட்டப்பல்கலைக்கழகங்கள், விண்வெளி ஆராய்ச்சித்துறை என்று அனைத்துத் துறைகளிலும் முதன்மையாக விளங்குகின்ற உயர்கல்வி நிறுவனங்களில் நம்முடைய மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள்.

செலவுகளை அரசே ஏற்கும்

தமிழ்நாட்டு மாணவர்களின் வேகம் இந்திய நாட்டுடன் நிற்கவில்லை. 14 மாணவர்கள் தைவான், மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் உள்ள உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் சேர, முழுமையான 'ஸ்காலர்ஷிப்' பெற்றிருக்கிறார்கள். இந்தியாவின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குப் செல்கின்ற மாணவர்களுடைய கல்விச் செலவையும், வெளிநாடுகளில் படிக்கச்செல்லும் மாணவர்களின் முதல் பயணச்செலவையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

அரசுப்பள்ளி மாணவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்று மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்கள். நம்முடைய மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், அவர்கள் எந்த உயரத்தையும் எட்டிப்பிடிப்பார்கள். ஏன் விண்வெளியில் கூட நம்முடைய அரசுப்பள்ளி மாணவர்கள்தான் இனி ஆட்சி செலுத்துவார்கள். அவர்களுக்கு என்னுடைய அரசு துணையாக இருக்கும்.

அரசு துணை நிற்கும்

முதன்மை உயர்கல்வி நிறுவனங்களின் துணைவேந்தர்களும் இயக்குனர்களும், முதல்வர்களும் இங்கே வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு வேண்டுகோள். இந்த மாணவ-மாணவிகள் ஏதோ தனிநபர்களாக உங்கள் நிறுவனத்தில் சேரவில்லை. தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகளாகத்தான் சேருவார்கள். எங்களுடைய பிள்ளைகளின் பின்னால், இந்த அரசு எப்போதும் துணையாக நிற்கும்.

மாணவர்களே படிக்கின்ற காலத்தில் வேறு எதிலும் கவனம் சிதறாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உங்களை நம்பித்தான் உங்கள் பெற்றோரும், இந்தச் சமூகமும் இருக்கிறார்கள். எங்கள் கனவுகளை நீங்கள் நிறைவேற்றவேண்டும். தமிழ்நாடு பெருமைப்பட, இந்திய நாடு பெருமைப்பட நீங்கள் உயரவேண்டும் என்று தமிழ்நாட்டு முதல்-அமைச்சராக மட்டுமில்லை, உங்கள் குடும்பத்தில் ஒருவராக, அன்புடன் கேட்கிறேன். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments