புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 1,000 குளங்கள் 100 நாள் வேலை திட்டத்தில் அமைக்கப்படுகிறது




புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 1,000 குளங்கள் 100 நாள் வேலை திட்டத்தில் அமைக்கப்படுகிறது.

புதிய குளங்கள்

புதுக்கோட்டை மாவட்டம் வானம் பார்த்த பூமியாக காணப்படுகிறது. மாவட்டத்தில் பருவமழையை நம்பியே விவசாயம் நடைபெறுகிறது. ஆழ்துளை கிணறு, ஏரி, குளங்கள், ஊரணி, கண்மாய் பாசனங்கள் மூலம் பாசன வசதி உள்ளது. மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தின் அளவை உயர்த்தவும், மழை நீரை சேமிக்கவும், எதிர்கால நலன் கருதி புதிதாக 1,000 குளங்கள் அமைக்க மாவட்ட நிர்வாகம் மூலம் ஊரக வளர்ச்சி துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த குளங்கள் அமைக்கும் பணி 100 நாள் வேலை திட்டத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:- மாவட்டத்தில் ஏற்கனவே பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி துறை, உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் குளங்கள் அதிகம் உள்ளன. இருப்பினும் மழை நீரை சேமிக்கவும், விவசாயத்திற்கு பயன்படுத்தவும், தண்ணீர் தேவைக்காகவும் 1,000 குளங்கள் புதிதாக அமைக்கப்படுகிறது. இதில் 400 குளங்கள் தோண்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

புறம்போக்கு நிலங்கள்

இந்த குளங்கள் தோண்டும் பணியில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் முழுமையாக பயன்படுத்தப்படுகின்றனர். எந்திரங்கள் இல்லாமல், மண்வெட்டி உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு குளங்கள் வெட்டப்படுகிறது. ஒரு ஊரில் உள்ள அரசு புறம்போக்கு நிலம், கோவில்களின் அருகே பொதுமக்கள் பயன்பாட்டிற்கான இடம் போக மீதமுள்ள இடம், மேய்ச்சல் புறம்போக்கு நிலம், நீர் நிலைகளின் அருகே புறம்போக்கு நிலம் உள்ளிட்டவற்றில் குளம் அமைக்கப்படுகிறது. ஒரு குளத்தின் நீளம், அகலம், ஆழம் அளவானது இடத்திற்கு தகுந்தாற் போல் வேறுபடும். என்ஜினீயர்கள் வைத்து ஆராய்ந்து ஒரு இடத்தில் அளவிடப்பட்டு குளங்கள் அமைக்கப்படுகிறது. புதிய குளங்கள் அமைக்கும் பணி விரைவில் நிறைவடையும்'' என்றனர்.

வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை அதிகமாக பெய்யும் போது புதிய குளங்களில் நீர் தேங்க அதிகம் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் மழைநீர் இந்த குளங்களில் சேமிக்கப்படும். இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயருவதோடு, தண்ணீரை தேவைக்கு பயன்படுத்தி கொள்ள வாய்ப்பு உள்ளது. இந்த திட்டம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments