புதுக்கோட்டை பஸ் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்தது பயணிகள் அலறியடித்து ஓட்டம்




புதுக்கோட்டை பஸ் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதையடுத்து, பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

புதிய பஸ் நிலையம்

புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் நாள்தோறும் ஏராளமான பஸ்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் இயக்கப்பட்டு வருகிறது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்களில் பயணம் செய்து வருகின்றனர். புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் சார்பில் பஸ் நிலையத்தில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளன.

இந்த கட்டிடம் கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாகியுள்ளதால் இதனை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, புதிய பஸ் நிலைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட தமிழக அரசு ரூ.40 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஓராண்டு மேலாகியும் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பழுதடைந்த கட்டிடம் அவ்வப்போது இடிந்து விழுந்து பலர் காயம் அடைந்துள்ளனர்

மேற்கூரை இடிந்து விழுந்தது

இந்தநிலையில் நேற்று மாலை புதுக்கோட்டையில் திடீரென்று மழை பெய்தது. இதில், புதிய பஸ் நிலையத்தில் உள்ள காரைக்குடி பஸ் நிறுத்தம் பகுதியில் திடீரென்று மேற்கூரை இடிந்து விழுந்தது. அப்பகுதியில் நின்று கொண்டிருந்த பயணிகள் மற்றும் பஸ் நிலையத்தில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் அலறியடித்து ஓடினர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பஸ் நிலைய கட்டிடங்களை முழுமையாக இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments