எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் கைது இலங்கை கடற்படையினர் அட்டூழியம்




எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

விசைப்படகு மீனவர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் பகுதிகளில் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இப்பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருவது வழக்கம். இந்தநிலையில் வழக்கம் போல் நேற்று முன்தினம் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து 150 விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

இதில் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த வீரன் என்பவருக்கு சொந்தமான படகில் அதே பகுதியை சேர்ந்த கணேசன் (வயது 32), சேரன் (24), பரமசிவம் (51), பாலமுருகன் (29) ஆகியோர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

4 பேர் கைது

இவர்கள் சுமார் 32 நாட்டிக்கல் தொலைவில் நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீன்பிடித்துக் கொண்டிருந்த 4 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர். மேலும் விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் ஓரிரு நாட்களில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இந்த கைது சம்பவம் புதுக்கோட்டை மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. மத்திய, மாநில அரசுகள் இந்த விஷயத்தில் தலையிட்டு 4 மீனவர்களையும், அவர்களது விசைப்படகையும் உடனே விடுவிக்க இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

இனிமேல் இது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments