கல்லணையில் திறக்கப்பட்ட தண்ணீர் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு விரைவில் வந்தடையும் கால்வாய் சீரமைப்பு பணியை தற்காலிகமாக நிறுத்த முடிவு




கல்லணையில் திறக்கப்பட்ட தண்ணீர் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு விரைவில் வருகிறது. கால்வாய் சீரமைப்பு பணியை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கல்லணை கால்வாய்

மேட்டூர் அணையில் திறக்கப்படும் காவிரி தண்ணீர் கல்லணையை வந்தடைகிறது. கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம், கல்லணை கால்வாய் ஆகிய 4 பகுதிகளாக தண்ணீர் பிரித்து விடப்படுகிறது. இதில் கல்லணை கால்வாய் பகுதி தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது.

இந்த கால்வாயில் வரும் தண்ணீர் கடைமடையான புதுக்கோட்டை மாவட்டம் மும்பாலையில் கடலில் கலக்கிறது. தஞ்சாவூர் மாவட்டம் வழியாக வரும் இந்த கால்வாய் புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம் அருகே மேற்பனைக்காடு பக்கம் நுழைகிறது. இந்த கல்லணை கால்வாய் மூலம் இப்பகுதிகளில் சுமார் 32 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இதனால் காவிரி தண்ணீரை இப்பகுதி விவசாயிகள் நம்பியுள்ளனர்.

சீரமைப்பு பணி

இந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணையை வந்தடைந்தது. கல்லணையில் கடந்த 31-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதில் கல்லணை கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீர் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாய்ந்தோடி வந்தது.

தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்குள் நுழைந்து வர வேண்டும். ஆனால் மேற்பனைக்காடு பகுதியில் ஷட்டர்கள் உடைக்கப்பட்டு, கான்கிரீட் தரைத்தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக இந்த பாதைக்கு வரக்கூடிய தண்ணீர் தஞ்சாவூர்-புதுக்கோட்டை மாவட்ட எல்லையான ஈச்சன்விடுதி பகுதியில் உள்ள கால்வாயில் தடுத்து நிறுத்தப்பட்டு சேதுபாவா சத்திரம், புதுப்பட்டினம் வாய்க்கால்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

தற்காலிகமாக நிறுத்த முடிவு

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்லணை கால்வாயில் நடைபெறும் சீரமைப்பு பணிகளால் தண்ணீர் கடைமடைக்கு வராதா? என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகையில், "மேற்பனைக்காட்டில் நடைபெறும் சீரமைப்பு பணி முழுவீச்சில் நடைபெறுகிறது. தண்ணீர் கடைமடையை சென்றடைவதற்காக சீரமைப்பு பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தண்ணீர் பாய்ந்தோடும் வகையில் தற்போதுள்ள பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்பின் ஓரிரு நாட்களில் தண்ணீர் திறந்து விடப்படும். கல்லணை கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீர் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு விரைவில் வரும்'' என்றனர். கா்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைந்தபடியே உள்ளது. அதனால் கல்லணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் குறைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள் எதிர்பார்ப்பு

கல்லணை கால்வாயில் தண்ணீரை எதிர்பார்த்து விவசாயிகள் உள்ளனர். அடுத்து சம்பா நெல் சாகுபடி உள்பட விவசாயத்திற்கு கல்லணை கால்வாயை தண்ணீரை நம்பி இருக்கின்றனர். சீரமைப்பு பணி ஒரு புறம் நடந்தாலும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கடைமடைக்கு தண்ணீர் வந்து சேர வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments