போதுமான மீன்கள் கிடைக்காததால் நஷ்டம்: ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை விசைப்படகுகள் கரையில் நிறுத்தம்




போதுமான மீன்கள் கிடைக்காததால் நஷ்டம் ஏற்படுவதால் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

விசைப்படகுகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் பகுதிகளில் விசைப்படகுகளில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர். வாரத்தில் சனிக்கிழமை, திங்கட்கிழமை, புதன்கிழமை கடலுக்கு மீன்பிடிக்க சென்று மறுநாள் காலையில் கரைக்கு திரும்பி வருவார்கள். இந்த நிலையில் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது:-

ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருகிறோம். கடலில் நல்ல மீன்கள் வலையில் பிடிபட்டு வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் மீன்கள் போதுமான அளவில் பிடிபடுவதில்லை. நல்ல விலையுர்ந்த மீன்களும் சிக்குவதில்லை.

நஷ்டம்

சமீபத்தில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் கைது சம்பவம் நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை மீன்பிடிக்க கடலுக்கு சென்று வந்ததில் மீன்கள் அதிகம் பிடிபடவில்லை. இதனால் மீனவர்களுக்கு பெரும் நஷ்டம் தான். மீன்பிடிக்க செல்வதில் ஒரு விசைபடகிற்கு டீசல் செலவு உள்ளிட்ட செலவுகள் ரூ.50 ஆயிரம் வரை ஆகிறது. அதற்கேற்ப மீன்கள் பிடிபட்டு கரைக்கு கொண்டு வந்து விற்பனையாவதில் லாபம் கிடைக்கும். ஆனால் செலவுக்கு கூட கட்டுப்படியாகாமல் நஷ்டமானது. இதனால் கூட்டம் நடத்தி முடிவு எடுத்தோம். அதனால் இன்று (அதாவது நேற்று) கடலுக்கு செல்லவில்லை. கடலுக்கு செல்வதில் அடுத்து கூட்டம் நடத்தி முடிவு செய்வோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments