கட்ட பஞ்சாயத்தார்கள் தலையீட்டை தடுக்க வாட்டாத்திக்கோட்டை போலீஸ் நிலையத்தில் லஞ்சத்திற்கு எதிராக அறிவிப்பு பலகை பொதுமக்கள் பாராட்டு




கட்ட பஞ்சாயத்தார்களின் தலையீடுகளை தடுக்கும் பொருட்டு, வாட்டாத்திக்கோட்டை போலீஸ் நிலையத்தில் லஞ்சத்திற்கு எதிராக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கட்ட பஞ்சாயத்தார்கள் தலையீடு

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு, பாப்பாநாடு, திருவோணம் மற்றும் வாட்டாத்திக்கோட்டை போலீஸ் சரகப் பகுதிகள் அதிகமான குக்கிராமங்களை கொண்டதாகும். இந்தப் பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் கூலித்தொழிலாளர்களாக உள்ளனர். இவர்களில் சிலர் ஏதேனும் சட்ட உதவிக்காக போலீஸ் நிலையத்திற்கு தனியாக செல்ல இன்றளவும் அச்சப்படுகின்றனர். இதனால் அவ்வப்போது போலீஸ் நிலையங்களுக்கு சென்று வரக்கூடிய கட்ட பஞ்சாயத்தார்களை அணுகுகின்றனர். மறுமுனையில் பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையத்திற்கு தனியாக நேரில் சென்று புகார் கொடுக்கும் பட்சத்தில், இதனைத் தெரிந்து கொள்ளும் கட்ட பஞ்சாயத்தார்கள் புகார் கொடுத்தவர்களை அணுகி, இரு தரப்பையும் அழைத்து பஞ்சாயத்து பேசி போலீசாரின் மேல் சட்ட நடவடிக்கையினை தடுத்து, கட்ட பஞ்சாயத்து நபர்கள் பணம் ஆதாயம் பார்ப்பதாக போலீஸ் உயரதிகாரிகளுக்கும் புகார்கள் சென்றதாக கூறப்படுகிறது.

லஞ்சத்திற்கு எதிராக அறிவிப்பு பலகை

இந்த நிலையில் வாட்டாத்திக்கோட்டை போலீஸ் நிலையத்தின் முகப்பில் போலீஸ் துறை சார்பில், லஞ்சத்திற்கு எதிராக சப்-இன்ஸ்பெக்டர் சாம்சன் லியோ தனது செல் நம்பரை குறிப்பிட்டு ஒரு அறிவிப்பு பலகையினை வைத்துள்ளார். அதில், "லஞ்சம் வாங்குவதும் குற்றம் -லஞ்சம் கொடுப்பதும் குற்றம்" என்று தலைப்பிட்டு, போலீஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்களிடம் போலீஸ் அதிகாரிகள் பெயரைக் கூறியோ, போலீசார் பெயரைக் கூறியோ யாரேனும் பணமோ -பொருளோ கேட்டால் இதுபோன்ற சட்டவிரோதிகள் குறித்து தகவல் தருமாறும், மேலும் லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாராட்டு

வாட்டாத்திக்கோட்டை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்ற சாம்சன் லியோ மற்றும் போலீசாரின் தீவிர நடவடிக்கையினால் அந்தப் பகுதியில் மணல் திருட்டு போன்ற குற்றங்கள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும், லஞ்சத்திற்கு எதிராக வாட்டாத்திக்கோட்டை போலீஸ் நிலையத்தின் முகப்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளதற்கும் இப்பகுதியை சேர்ந்த கிராம மக்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும் திருவோணம், பாப்பாநாடு, ஒரத்தநாடு ஆகிய போலீஸ் நிலையங்களிலும் லஞ்சத்திற்கு எதிராக இதேபோன்று அறிவிப்பு பலகையினை போலீசார் வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments