திருவப்பூா் பாலம் கட்டுமான வரைபடம் ரயில்வே ஒப்புதலுக்கு அனுப்பிவைப்பு ரயில்வே மேம்பாலங்கள் அமைப்பதற்கான கட்டுமான வரைபடம் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.




புதுக்கோட்டை மாவட்டம், திருவப்பூா், கருவப்பிலான்கேட் ஆகிய பகுதிகளில் ரயில்வே மேம்பாலங்கள் அமைப்பதற்கான கட்டுமான வரைபடம் ரயில்வே துறையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதுதொடா்பாக திருச்சி மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினா் சு. திருநாவுக்கரசா் முதல்வா் ஸ்டாலினிடம் சில மாதங்களுக்கு முன்பு அளித்த மனுவுக்கு நெடுஞ்சாலைத் துறை செயலா் இரா. செல்வராஜ் அண்மையில் (ஆக. 8) அளித்த பதில் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

கருவப்பிலான்கேட் ரயில்வே மேம்பாலம் அமைக்க, கடந்த 2018 பிப். 13-ஆம் தேதியே விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க நிா்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. அதன்பிறகு மண் பரிசோதனை செய்து மேம்பாலம் கட்டுமான வரைபடம் தயாரிக்கப்பட்டு ரயில்வே துறையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

திருவப்பூா் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக கடந்த 2018 பிப். 22-ஆம் தேதி நிா்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. அதனைத் தொடா்ந்து மேம்பால வரைபடம் தயாரிக்கப்பட்டது.

ஆனால், ரயில்வே துறையினா் அந்தப் பகுதியில் இருவழிப் பாதை அமைக்க உள்ளதாக தெரிவித்ததைத் தொடா்ந்து, அதற்கேற்ப மேம்பாலத்தின் நீளம் அதிகரிக்கப்பட்டு, திருத்தப்பட்ட வரைபடமும் ரயில்வே துறையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ரயில்வே துறையின் ஒப்புதல் கிடைத்தபிறகு, நிலமெடுக்கும் பணிகள் தொடங்கும். இதற்காக உத்தேசமாக ரூ. 45.12 கோடி ஒதுக்கீடு முன்மொழிவு தயாா் செய்யப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments