அதிராம்பட்டினத்தில் ரெயில்வே கேட் அருகே குண்டும், குழியுமாக காணப்படும் கிழக்கு கடற்கரை சாலை சீரமைக்கப்படுமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு




அதிராம்பட்டினத்தில் ரெயில்வே கேட் அருகே குண்டும், குழியுமாக காணப்படும் கிழக்கு கடற்கரை சாலை சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

குண்டும், குழியுமான சாலை

அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் ரெயில்வே கேட் உள்ளது. இந்த ரெயில்வே கேட்டை கடந்து தான் கட்டுமாவடி, தொண்டி, ராமேஸ்வரம், தூத்துக்குடி, திருச்செந்தூர் ஆகிய ஊர்களுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன.

மகிழங்கோட்டை, ராஜாமடம் ஆகிய கிராம பகுதியில் இருந்து செல்லவும், அதிராம்பட்டினத்திற்கு வரவும் ரெயில்வே கேட் சாலையை கடந்து தான் அனைத்து வாகனங்களும் சென்று வர வேண்டும்.

கடந்த சில மாதங்களாக ெரயில்வே கேட் தண்டவாளங்கள் அருகே கிழக்கு கடற்கரை சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலையாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

விபத்துகளில் சிக்கும் வாகன ஓட்டிகள்

இந்த சாலையில் மின்விளக்குகளும் இல்லாததால் இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சாலையில் பள்ளங்கள் இருப்பது தெரியாமல் தடுமாறி கீழே விழுந்து விபத்துகளில் சிக்கி கொள்கின்றனர். மேலும் வாகனங்களும் பழுதாகி வருகின்றன.

சாலையில் பள்ளம் இருப்பதை வாகன ஓட்டிகளுக்கு உணர்த்த அதை சுற்றி கற்களை போட்டு வைத்து எச்சரித்து உள்ளனர். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அப்பகுதியை கடக்கும்போது தடுமாறுகின்றனர்.

சீரமைக்க வேண்டும்

ரெயில் வரும்போது ரெயில்வே கேட் மூடப்பட்டு திறக்கும்போது வாகன ஓட்டிகள் அவசர, அவசரமாக முந்தி செல்லும்போது சாலையில் உள்ள பள்ளங்களினால் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அதிராம்பட்டினத்தில் ரெயில்வே கேட் அருகே குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments