சென்னை-நாகர்கோவில் மதுரை-பெங்களூரு தமிழ்நாட்டுக்கு மேலும் 2 வந்தே பாரத் ரெயில்கள் பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கிவைத்தார்




தமிழ்நாட்டுக்கு மேலும் 2 வந்தே பாரத் ரெயில்களை பிரதமர் மோடி, காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார். சென்னை-நாகர்கோவில் மற்றும் மதுரை-பெங்களூரு இடையே இந்த ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

திவேகத்தில் உலக தரம் வாய்ந்த சொகுசு பயணம் என்கிற அடிப்படையில், ‘வந்தே பாரத்' ரெயில்கள் நாடு முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னை-நாகர்கோவில், மதுரை-பெங்களூரு

தமிழகம் உள்பட நாடு முழுவதும் 77 வழித்தடங்களில் 51 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், சென்னை எழும்பூர் - நாகர்கோவில் மற்றும் மதுரை - பெங்களூரு, மீரட் - லக்னோ இடையே 3 புதிய வந்தே பாரத் ரெயில் சேவை நேற்று தொடங்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொலி காட்சி வாயிலாக, சென்னை எழும்பூர் - நாகர்கோவில், மதுரை - பெங்களூரு உள்பட 3 புதிய வந்தே பாரத் ரெயில் சேவைகளையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதன்மூலம், நாட்டில் வந்தே பாரத் ரெயில் சேவைகளின் எண்ணிக்கை 54-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் விழா

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில், எழும்பூர்-நாகர்கோவில் வந்தே பாரத் ரெயில் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய இணை-மந்திரி எல்.முருகன், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், தெலுங்கானா, புதுச்சேரி முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

பிரதமர் கொடியசைத்ததும் நாகர்கோவில் வந்தே பாரத் ரெயில் பகல் 12.55 மணிக்கு புறப்பட்டது. சென்னை எழும்பூர் - நாகர்கோவில் ரெயிலில் பயணம் செய்த பயணிகள், மாணவர்களை, கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய இணை மந்திரி எல்.முருகன், முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் கையசைத்து வழியனுப்பி வைத்தனர்.

உலகத்தரமானவை

முன்னதாக, சென்டிரல் ரெயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கவர்னர் ஆர்.என்.ரவி பேசும்போது, ‘சுயசார்பு இந்திய திட்டத்தின் கீழ் ‘வந்தே பாரத்' ரெயில்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. 2047-ல் வளர்ச்சி அடைந்த பாரதமாக இந்தியா உருவாகும். நம்முடைய வந்தே பாரத் ரெயில்கள் உலகத் தரமானவை. அடுத்த 2 ஆண்டுகளில் இந்தியா 3-வது பொருளாதார மிக்க நாடாக மாறும். தமிழகத்தில் சாலை, ரெயில், துறைமுகம், விமான நிலையம் ஆகியவற்றுக்கான திட்டங்கள் மத்திய அரசின் நிதியுதவி மூலம் நிறைவேற்றப்பட்டு வருகின்றன’ என்றார்.

ரூ.6 ஆயிரம் நிதி

மத்திய இணை-மந்திரி எல்.முருகன் பேசுகையில், பிரதமர் மோடியின் முயற்சியால் மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரெயில் சேவைக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில், அனைவரும் புல்லட் ரெயிலில் செல்வோம். கடந்த மத்திய பட்ஜெட்டில் ரூ.6 ஆயிரம் கோடி தமிழக ரெயில்வே திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரெயில்வே நிலையங்களும் தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்துக்கு 2 புதிய வந்தே பாரத் ரெயில் சேவை வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி என்றார்.

உற்சாக வரவேற்பு

நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், நடிகை குஷ்பு தமிழக பா.ஜனதா துணைத் தலைவர் கரு.நாகராஜன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்பட பலர் பங்கேற்றார்கள்.

நாகர்கோவில் புறப்பட்டு சென்ற வந்தே பாரத் ரெயிலுக்கு எழும்பூர், தாம்பரம், விழுப்புரம், திருச்சி உள்பட நாகர்கோவில் வரை வழிநெடுகிலும் பா.ஜனதா நிர்வாகிகள், பொது மக்கள் மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மதுரையில் இருந்தும் உற்சாகம்

இதேபோல் மதுரை-பெங்களூரு வந்தே பாரத் ரெயில் தொடங்கி வைக்கப்பட்டதும், ஏராளமான பயணிகள் உற்சாகமாக பயணித்தனர்.

சென்டிரல் - கோவை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில்தான் தமிழகத்தில் 16 பெட்டிகள் கொண்ட முதல் ரெயில் ஆகும். தற்போது முதன் முறையாக தென் மாவட்டங்களுக்கு 16 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. இதில் சேர்கார் இருக்கை 1024, எக்சிகியூட்டிவ் சேர்கார் இருக்கை 104 என 1,128 இருக்கைகள் உள்ளன. இதனால் தென் மாவட்டங்கள் செல்வோருக்கு வந்தே பாரத்தில் எளிதாக இருக்கை கிடைக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. தென்மாவட்டத்திற்கு அதிக பயணிகள் பயணிப்பதால் ரெயில் பெட்டிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை எழும்பூரில் இருந்து, நெல்லை வரை இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலில் 530 இருக்கைகள் மட்டுமே உள்ளது.

முன்பதிவு விறுவிறுப்பு

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தேபாரத் ரெயில் நாளை (2-ந்தேதி) முதல் வழக்கமான சேவையில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் வாரத்தில் புதன்கிழமை தவிர மற்ற 6 நாட்களும் இயக்கப்பட உள்ளது. எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரெயில் 726 கிலோ மீட்டர் தூரத்தை 8 மணி நேரம் 50 நிமிடத்தில் சென்றடைகிறது.

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரெயிலுக்கான முன்பதிவு நேற்று முன்தினம் மதியம் தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) நாகர்கோவில் -சென்னை எழும்பூர் டிக்கெட்டுகள் முழுவதும் முடிந்துவிட்டது.

நாளை முதல் (திங்கட்கிழமை) இயக்கப்பட உள்ள எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரெயிலுக்கான முன்பதிவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments