ஆகஸ்டு மாதம் வாங்கவில்லையா? ரேஷன் கார்டுதாரர்கள் வருகிற 5-ந் தேதி வரை பருப்பு, பாமாயிலை வாங்கலாம் அரசு புதிய உத்தரவு




ஆகஸ்டு மாதத்துக்கான பருப்பு, பாமாயிலை வாங்காத ரேஷன் கார்டுதாரர்கள், வருகிற 5-ந் தேதி வரை வாங்கிக்கொள்ளலாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

துவரம் பருப்பு, பாமாயில்

உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையானது தமிழகம் முழுவதும் உள்ள 36 ஆயிரத்து 954 ரேஷன் கடைகள் மூலம் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் அரிசியை விலையின்றி வழங்குகிறது. கோதுமை, சர்க்கரை மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றை மானிய விலையில் வழங்கி வருகிறது.

இதுதவிர, சிறப்பு பொது வினியோகத் திட்டத்தின் வாயிலாக 2 கோடியே 23 லட்சத்து 49 ஆயிரத்து 212 ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30-க்கும், ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25-க்கும் மானிய விலையில் வழங்கி வருகிறது.

கடந்த ஏப்ரல் 19-ந் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகளின் காரணமாக பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் மேற்கொள்வதில் ஏற்பட்ட தாமதத்தால் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் இருந்து ரேஷன் கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

வருகிற 5-ந் தேதி வரை பெறலாம்

ஒவ்வொரு மாதமும் பருப்பு, பாமாயில் பெற முடியாத ரேஷன் அட்டைதாரர்கள் அடுத்து வரும் மாதங்களில் அவற்றை வாங்கிக்கொள்ள நடைமுறைகள் மேற்கொண்டு வரப்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை நேற்று ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.

இது குறித்து உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குனர் த.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆகஸ்டு மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஒதுக்கீட்டினை பெறாத ரேஷன் அட்டைதாரர்கள் முழுமையாக பெற்று பயன்பெறும் வகையில், துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை வருகிற 5-ந் தேதி வரையில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது" என்று தெரிவித்து உள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments