கும்பகோணம் உள்பட 6 கோட்டங்களில் அரசு பஸ்கள் வருகை, புறப்பாடு அறிய ‘செயலி’ விரைவில் அறிமுகம்




கும்பகோணம் உள்பட 6 கோட்டங்களிலும் அரசு பஸ்கள் வருகை, புறப்பாடு அறிய செயலி வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது.

அரசு பஸ்கள்

இந்திய ரெயில்வேயில் ரெயில்கள் வருகை, புறப்பாடு, எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது என்பதை பயணிகள் அறிய வசதியாக தனி செயலி உள்ளது. மேலும் தொடர்பு எண்களும், இணையதளத்திலும் அறிந்து கொள்ளும் வசதி உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகத்தில் சென்னையில் அரசு பஸ்கள் வருகை, புறப்பாடு, நிறுத்தம், வந்து கொண்டிருக்கும் இடங்களை அறிய சென்னை பஸ் என்ற செயலி கடந்த 2022-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து தமிழகத்தின் மற்றப்பகுதிகளிலும் அரசு பஸ்கள் வருகை, புறப்படும் நேரம், நிறுத்தத்தை பயணிகள் அறியும் வகையில் செயலி ஒன்று உருவாக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜி.பி.எஸ். கருவி

இதுதொடர்பாக அரசு போக்குவரத்து கழக வட்டாரத்தினர் கூறுகையில், “அரசு போக்குவரத்து கழகத்தில் புதிய பஸ்கள் வாங்கப்பட்டு பயன்பாட்டிற்கு விடப்படுகிறது. அந்த வகையில் புறநகர பஸ்கள் மஞ்சள் நிறத்திலும், டவுன் பஸ்கள் நீல நிறத்திலும் புதிய பஸ்கள் இயங்குகிறது. இதேபோல அரசு விரைவு போக்குவரத்து கழகத்திலும் சொகுசு பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. புதிய பஸ்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு இயக்கப்படுகிறது.

சென்னை மாநகரில் அரசு பஸ் வருகை, புறப்படும் நேரம், எங்கு வந்து கொண்டிருக்கிறது என்ற விவரம் அறிய செயலி உள்ளது. இதேபோல தமிழகத்தின் பிற பகுதிகளில் இயக்கப்படும் அரசு பஸ்களின் வருகை, புறப்பாடு நேரம் அறிய தனி செயலி உருவாக்கப்படுகிறது. அந்த வகையில் அரசு போக்குவரத்து கழகத்தில் விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோவை, மதுரை, நெல்லை ஆகிய 6 கோட்டங்களிலும் இந்த செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. பஸ் எந்நேரம் புறப்படுகிறது, எங்கு வந்து கொண்டிருக்கிறது, பஸ் நிறுத்தத்திற்கு வருவது எப்போது? உள்ளிட்ட விவரங்களை பயணிகள் தங்களது கையடக்க ஸ்மார்ட் போனில் அறிந்து கொள்ளலாம்'' என்றனர்.

கும்பகோணம் கோட்டம்

கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்து கழகத்தில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இயக்கப்படும் பஸ்கள் அடங்கும். அந்த வகையில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும்போது இம்மாவட்டங்களை சேர்ந்த பயணிகள் அரசு பஸ்களில் பயணிக்க முற்படும்போது இந்த செயலி மூலம் பஸ்கள் விவரத்தை எளிதில் அறிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments