பட்டுக்கோட்டை கொண்டப்ப நாயக்கன் பாளையம் தெருவில் ரெயில்வே சுரங்க பாதை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியல்




பட்டுக்கோட்டை கொண்டப்ப நாயக்கன் பாளையம் ெதருவில் ரெயில்வே சுரங்க பாதை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சுரங்கப்பாதை அமைக்க ஏற்பாடு

பட்டுக்கோட்டை 23-வது வார்டு கொண்டப்ப நாயக்கன் பாளையம் தெருவில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். சுரங்கப்பாதை அமைப்பதால் அந்த பகுதியில் உள்ள ரேஷன் கடை இடிபடுகிறது. அதனால் அந்த பகுதியில் உள்ள 450 ரேஷன் கார்டுதாரர்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால் 1 கிலோ மீட்டர் தூரம் சுற்றி புதிய ரேஷன் கடைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். அருகில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பக்கத்தில் உள்ள கட்டிடங்களும் இடிபடும் நிலை உள்ளது. இதனால் அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் பாதிக்கப்படுவார்கள். இதனால் அந்த பகுதி மக்கள் சுரங்கப்பாதை தேவையில்லை. ரெயில்வே சார்பில் மூடு கேட் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

சாலைமறியல்

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் சார்பில் மதுரையில் உள்ள சென்னை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த ஐகோர்ட்டு மதுரை கிளை இருதரப்பையும் அழைத்து பேசி மக்கள் ஒத்துழைப்புடன் செய்ய வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று அதிகாரிகள் சுரங்கப்பாதை அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வந்ததாக தெரிகிறது. இதை அறிந்த பட்டுக்கோட்டை நகராட்சி 23-வது வார்டு மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் எஸ்.ஜெ. சம்பத் தலைமையில் திரண்டு ரேஷன் கார்டை திருப்பி அளிப்பதாக கூறி சீனி.பன்னீர்செல்வம் நினைவு வளைவு அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் உதவி கலெக்டர் வந்தால் தான் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றனர்.

போராட்டம் ஒத்திவைப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் நசீர், தாசில்தார் சுகுமார், நகராட்சி நகரமைப்பு அலுவலர் விஜயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சில நாட்களில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது. இதனால் சாலை மறியல் போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments