ராமேசுவரம்-தலைமன்னார் இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து மத்திய அரசுக்கு அமைச்சர் எ.வ.வேலு வேண்டுகோள்




ராமேசுவரம்-தலைமன்னார் இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்தை தொடங்கிட மத்திய அரசு நிதி உதவி அளிக்க வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடலோர மேம்பாட்டு கூட்டம்

இந்தியாவின் கடல்சார் துறையை மேம்படுத்துவதில் கடலோர மாநிலங்களின் பங்களிப்பு மற்றும் கூட்டு முயற்சியை வலுப்படுத்தும் விதமாக கோவாவில் கடலோர மாநிலங்கள் மேம்பாட்டு குழும கூட்டம் மத்திய நீர்வழி துறை மந்திரி சர்பானந்த சோனவால் தலைமையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

நாகப்பட்டினம் துறைமுக வளர்ச்சி பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ.10.47 கோடி நிதி நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன் துறைமுகத்துக்கு இடையே கப்பல் சேவைகளை உறுதி செய்வதுடன், இலங்கையுடனான உறவை வலுப்படுத்த உதவும்.

கப்பல் போக்குவரத்து

நாகப்பட்டினம் துறைமுகத்தின் விரிவாக்கத்துக்கு, சாகர்மாலா திட்டத்தின் கீழ் ரூ.300 கோடி நிதியுதவி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதன்மூலம் நடுத்தர சரக்கு மற்றும் பயணிகள் கப்பல்களை கையாளுவதற்கும், இலங்கையுடனான வர்த்தகத்தை மேலும் மேம்படுத்தவும் முடியும்.

தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு கடல்சார் பயிற்சி நிறுவனத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக சாகர்மாலா திட்டத்தின், கடலோர சமூக மேம்பாட்டின் கீழ், 100 சதவீத நிதியுதவியாக ரூ.11.47 கோடிக்கான அனுமதி விரைவில் வழங்க வேண்டும்.

ராமேசுவரம்-தலைமன்னார் இடையேயான கப்பல் போக்குவரத்து குறிப்பிடத்தக்க கலாசார மற்றும் பொருளாதார மதிப்பை பெற்றுள்ளது. இந்த சேவை ஒரு காலத்தில் இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையேயான முக்கிய இணைப்பாக இருந்தது.

நிதியுதவி

இந்த கப்பல் சேவையை மீண்டும் தொடங்க ராமேசுவரத்தில் தேவையான உள்கட்டமைப்பை மேம்படுத்த 100 சதவீத நிதியுதவி வழங்க வேண்டும். இதன் மூலம் இப்பகுதியில் சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சி மேம்படும்.

மண்டபம், பாம்பன், தேவிபட்டினத்தில் கூடுதலாக 3 மிதக்கும் தோணித்துறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குஜராத்தில் தேசிய கடல்சார் பாரம்பரிய அருங்காட்சியக வளாகம் உருவாக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மாநில அளவில் அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு 100 சதவீத நிதியுதவி வழங்க வேண்டும்.

மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிறு துறைமுகங்கள் வளர்ச்சி பெறவும், மாநில அரசின் பொருளாதாரம் மேம்பாடு அடையவும் உதவிட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments