தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடியில் புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன மத்திய மந்திரி நிதின்கட்கரி பேட்டி




தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடியில் புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று கும்பகோணத்தில், மத்திய மந்திரி நிதின்கட்கரி கூறினார்.

பேட்டி

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி முதல் தஞ்சாவூர் வரை தேசிய நெடுஞ்சாலை பணிகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. இந்த பணிகளை மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி நேற்று காலை கும்பகோணத்தில் ஆய்வு செய்தார். கும்பகோணம் மூப்பக்கோவில் புறவழிச்சாலையில் சாலை வரைபடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

95 சதவீத பணிகள் நிறைவு

தஞ்சை- விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை ரூ.4,730 கோடியில் 164 கி.மீ தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் சோழபுரம், சோழபுரம் - சேத்தியாதோப்பு வரையிலான சாலைப் பணிகள் 95 சதவீத நிறைவு பெற்றுள்ளது. சாலை அமைப்பதற்கான கட்டுமான மூலப்பொருட்கள் கிடைப்பதில் சில சிக்கல் இருந்தது. பல தடைகளைத் தாண்டி சாலை மிகவும் தரமாக அமைந்துள்ளதில் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.

இந்த சாலைப்பணி கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 4-ந் தேதிக்குள் முடிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

ஆனால் விக்கிரவாண்டி- சேத்தியாத்தோப்பு வரை சாலை அமைப்பதில், ஒப்பந்தக்காரர் தாமதப்படுத்தியதால், அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு, மீண்டும் அந்தச் சாலைப் பணிக்கான ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. விரைவில் அந்த பணி தொடங்கும்.

ராக்கெட் ஏவுதளம்

ஆந்திர- தமிழக எல்லையில் ரூ.15 ஆயிரம் கோடியில், ராணிப்பேட்டை- சென்னை சாலையை விரிவாக்கம் செய்வதன் மூலம், சென்னை, பெங்களூரு, ஆந்திரா இடையிலான கனரக வாகன போக்குவரத்து நெரிசல் குறையும். தற்போது தேசிய நெடுஞ்சாலை மூலம் 10 புதிய சாலைகள் அமைக்க திட்டம் 727 கி.மீ. தூரத்துக்கு ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் இடையே உள்ள 2 வழிச்சாலையை, 4 வழிச்சாலையாக மாற்றுவதால், சிமெண்டு தொழிற்சாலைகளுக்குப் பயன் உள்ளதாக அமையும்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான தனிச் சாலை அமைக்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

ரூ.2 லட்சம் கோடி

தமிழகத்தில் ரூ.1 லட்சம் கோடியில், 2,781 கி.மீட்டர் தூரத்துக்கு புதியதாக 71 சாலைகள் அமைக்கும் திட்டம் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது. தமிழகத்தில் 2014-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை 451 பல்வேறு புதிய சாலைத் திட்டங்கள் 9,300 கி.மீ. தூரத்துக்கு ரூ.2 லட்சம் கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

2014-ம் ஆண்டுக்கு முன்பாக 4,975 தேசிய நெடுஞ்சாலைகள் இருந்தன. 2014-ம் ஆண்டுக்கு பிறகு தேசிய நெஞ்சாலைகள் 6,806 சாலையாக உயர்ந்துள்ளது.

நாடுமுழுவதும் ரூ.5 லட்சம் கோடியில் 10 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு 27 புதிய பசுமை வழிச் சாலை அமைய உள்ளது. தமிழகத்தில் 3 பசுமை வழிச்சாலை, 187 கி.மீ., தூரத்தில் ரூ.10 ஆயிரத்து 100 கோடி செலவில் அமைய உள்ளது. தமிழகத்துக்கு மேலும், ரூ.1 லட்சம் கோடி செலவு செய்ய தயாராக உள்ளோம்.

தமிழக அரசு நிலம் கையகப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்தியாவிலேயே, தேசிய நெடுஞ்சாலை பணியில், தமிழகம் நம்பர் 1- ஆக உள்ளது. மேலும், தமிழகத்தின் பங்களிப்பு நல்லப்படியாக உள்ளது. இவ்வாறு மத்திய மந்திரி நிதின்கட்கரி கூறினார்.

முன்னதாக கும்பகோணம் நாதன்கோவில் ஜெகநாதபெருமாள் கோவில், காசி விஸ்வநாதா் கோவிலில் மத்திய மந்திரி நிதின்கட்காரி சாமி தரிசனம் செய்தார். மத்திய மந்திரி நிதின்கட்கரியை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், எம்.பி.க்கள் சுதா, கல்யாணசுந்தரம், அன்பழகன் எம்.எல்.ஏ. பா.ஜனதா மாநில துணை பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மற்றும் பலர் வரவேற்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments