பலத்த சூறாவளி காற்று: தனுஷ்கோடியில் சாலையை மூடிய மணல் சுற்றுலா பயணிகள் அவதி




தனுஷ்கோடியில் பலத்த சூறாவளி காற்று காரணமாக மணல் சாலையை மூடியதால் சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

சாலையை மூடிய மணல்

ராமேசுவரம் அருகே புயலால் அழிந்துபோன தனுஷ்கோடி உள்ளது. இப்பகுதி இயற்கையாகவே கடல் சீற்றம் மற்றும் நீரோட்டம் உள்ள பகுதியாகும். இந்நிலையில் ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடி பகுதியில் சில நாட்களாக வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக கம்பிப்பாடு-அரிச்சல்முனை இடைப்பட்ட பகுதியில் உள்ள தனுஷ்கோடி சாலையில் பல இடங்களில் சாலை மணலால் மூடப்பட்டு உள்ளது.

சாலை அதிகளவு மணலால் மூடப்பட்டதால் தனுஷ்கோடி வரும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்டவை மணலில் சிக்கி இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.

சுற்றுலா பயணிகள் அவதி

இதன் காரணமாக தனுஷ்கோடி வந்த சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்தனர். தனுஷ்கோடியில் சாலையை மூடிய மணலை அகற்ற சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் தனுஷ்கோடி-அரிச்சல்முனை செல்லும் சாலையில் குவிந்து கிடக்கும் மணலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்தனர்.

இதற்கிடையே ராமேசுவரம் சேர்மன் நாசர்கான், துணை சேர்மன் பிச்சை தட்சிணாமூர்த்தி, ஆணையாளர் கண்ணன் ஆகியோர் மேற்பார்வையில் தனுஷ்கோடியில் சாலையில் கிடந்த மணல் ஜே.சி.பி. எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் நிம்மதி அடைந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments