புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 10,257 பேர் விண்ணப்பம்




புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 10,257 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

வாக்காளர் பட்டியல்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மேற்கொள்ள பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் 18 வயது பூர்த்தியடைந்தவர்களும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம்பெற விண்ணப்பித்து வருகின்றனர். ஆன்லைனிலும் விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கின்றனர். இதற்கிடையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது மார்ச் மாதம் வாக்காளர் இறுதிபட்டியல் வெளியிடப்பட்டது. அதன்பிறகு புதிய வாக்காளர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.

10,257 பேர் விண்ணப்பம்

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடந்த மார்ச் முதலும், சமீபத்தில் மேற்கொள்ளப்படும் பணியின் போதும் புதிய வாக்காளர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை (தனி), விராலிமலை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதிக்கு பிறகில் இருந்து நேற்று முன்தினம் வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 10,257 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதில் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் இடம்பெற ஏற்பாடு செய்யப்படுகிறது. இதேபோல வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்க 3,364 விண்ணப்பங்களும், திருத்தம் மேற்கொள்ள 9,929 விண்ணப்பங்களும் வரப்பெற்றுள்ளன. இந்த பணி முடிவடைந்ததும் அடுத்த மாதம் (அக்ேடாபர்) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது'' என்றனர்.

அடையாள அட்டை

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்களுக்கு சரிபார்க்கப்பட்டு, அந்த படிவம் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் அவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வடிவிலான வாக்காளர் அடையாள அட்டையும் வழங்கப்படுகிறது.

தேர்தல் ஆணையத்தின் மூலம் வாக்காளர்களின் முகவரிக்கு தபாலில் அனுப்பி வைக்கப்படுகிறது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது 1,300 அடையாள அட்டைகள் வரப்பெற்றுள்ளன. அதனை தபால்துறையினர் மூலம் வாக்காளர்களின் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments