தனுஷ்கோடியில் ரூ.80 லட்சத்தில் அமைக்கப்பட்டது: 2 தொலைநோக்கிகளுடன் மரப்பாலம் பறவைகளையும், கடலையும் பார்த்து ரசிக்கலாம்




கடல் மற்றும் பறவைகளை பார்த்து ரசிக்க வசதியாக 2 தொலைநோக்கிகளுடன் மரப்பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மரப்பாலம்

ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி கடல் பகுதியை ரசிக்க தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

தனுஷ்கோடி கடற்கரை அழகையும், அங்கு வரக்கூடிய பல விதமான பறவைகளையும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்க வசதியாக தமிழக வனத்துறையின் மூலம் ரூ.80 லட்சம் மதிப்பில் எம்.ஆர்.சத்திரம் வடக்கு கடற்கரையில் தேக்கு மரத்தில் நடைபாதையுடன் பாலம் அமைக்கும் பணி நடந்தது. இந்த பணியானது கடந்த ஆண்டு தொடங்கி நடைபெற்றது. சுமார் 200 மீட்டர் நீளத்தில் நடைபெற்ற இந்த பாலத்தின் பணிகள் 3 மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தன. நடைபாதை பாலத்தில் வியூ பாயிண்ட் ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது.

திறந்து வைப்பு

இந்த நடைபாதை பாலத்தை நேற்று தமிழக வனத்துறை முதன்மை அதிகாரி டாக்டர் சுதான்ஸ் குப்தா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் பாலத்தில் நடந்து சென்று தொலைநோக்கி மூலம் கடல் மற்றும் கடற்கரை அழகை பார்வையிட்டார்.

மாவட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜெகதீஷ், மாவட்ட வனத்துறை அதிகாரி ஹேமலதா, மண்டபம் வனச்சரகர் மகேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

2 தொலைநோக்கிகள்

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, “200 மீட்டர் நீளத்தில் தேக்குமரத்தில் அமைக்கப்பட்ட மரப்பாலம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. 2 தொலைநோக்கிகளும் நிறுவப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகள் இந்த நடைபாதை பாலத்தில் சென்று பார்ப்பதற்கு விரைவில் கட்டணம் நிர்ணயம் செய்யப்படும்” என்று கூறினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments