இலங்கை தலைமன்னாரில் இருந்து ராமேசுவரம் வரை கடலில் 56 கி.மீ. தூரம் நீந்தி 12 வயது சிறுவன் புதிய சாதனை பாராட்டுகள் குவிகிறது




இலங்கை தலைமன்னாரில் இருந்து ராமேசுவரம் அக்னி தீர்த்தம் வரை 56 கிலோ மீட்டர் தூரம் நீந்தி சென்னையை சேர்ந்த 12 வயது சிறுவன் சாதனை படைத்தார்.

சிறுவன் லக்சய் கிருஷ்ணகுமார்

சென்னையை சேர்ந்த கிருஷ்ணகுமார்‌ ஐஸ்வர்யா தம்பதியின் மகன் லக்சய் கிருஷ்ணகுமார் (வயது 12). ஆட்டிசம் பாதிப்பு குழந்தையான இவர், நீச்சலில் பல்வேறு சாதனைகள் படைத்து வருகிறார். குறிப்பாக கடலில் நீந்துவதில் சிறப்பு பயிற்சி பெற்று, அதிலும் சாதித்து வருகிறார்.

இந்நிலையில் மற்றொரு சாதனை முயற்சியாக இலங்கை தலைமன்னாரில் இருந்து ராமேசுவரம் அக்னி தீர்த்தம் வரை நீந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அனுமதியும் பெறப்பட்டது..

நேற்று முன்தினம் ராமேசுவரம் சங்குமால் பகுதிக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து தனது பெற்றோர் மற்றும் நீச்சல் பயிற்சியாளர் என 28 பேர் குழுவினர், 2 படகுகளில் இலங்கை தலைமன்னாருக்கு புறப்பட்டு சென்றனர்.

வெற்றிகறமாக நிறைவு

நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் தலைமன்னார் ஊர்முனை கடல் பகுதியில் இருந்து லக்சய் கிருஷ்ணகுமார், தனது நீச்சல் சாகச பயணத்தை தொடங்கினார். கடல் அலைகளில் எதிர்நீச்சல் போட்டு, இரவையும் பொருட்படுத்தாமல் நீந்தி வந்தார். உடன் சென்றவர்கள், படகுகளில் இருந்தபடி அவரது நீச்சல் சாகசத்தை பார்வையிட்டு வந்தனர்.

நேற்று அதிகாலை 5 மணிக்கு இந்திய கடல் எல்லையை அடைந்தார். தொடர்ந்து ராமேசுவரத்தை நோக்கி நீந்த தொடங்கினார். நேற்று பிற்பகல் 3.25 மணியளவில் ராமேசுவஞரம் அக்னி தீர்த்த கடற்கரை வந்தடைந்தார். அவரது சாதனை வெற்றிகரமாக நிறைவு பெற்றநிலையில், பெற்றோர் உள்பட அனைவரும் மகிழ்ச்சி பொங்க லக்சய் கிருஷ்ணகுமாரை பாராட்டினர்..

56 கிலோ மீட்டர் தூரம்

தலை மன்னாரில் இருந்து ராமேசுவரம் அக்னி தீர்த்தம் வரை என்பது 56 கிலோமீட்டர் தூரம் ஆகும். இவ்வளவு நீண்ட தூரத்தை 12 வயது சிறுவன் லக்சய் கிருஷ்ணகுமார் நீந்தி கடந்தது சிறந்த சாதனையாக கருதப்படுகிறது.

பா.ஜனதா மாவட்ட பார்வையாளர் முரளிதரன், நிர்வாகி மாரிச்செல்வம், சுங்கத்துறை சூப்பிரண்டு மகேஷ்குமார் மீனா, கடலோர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ், துறைமுக குடியுரிமை சப்-இன்ஸ்பெக்டர் இருளாண்டி, கோவில் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் உதிரபாண்டி உள்ளிட்டோரும் சிறுவனை பாராட்டினர்.

புதிய சாதனை

இதுகுறித்து சிறுவனின் நீச்சல் பயிற்சியாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களான சதீஷ், ரோஜர் ஆகியோர் கூறியதாவது:-

இலங்கை தலைமன்னாரில் இருந்து நீந்தி வந்தபோது, கடல் சீற்றமோ, அதிக காற்றோ இல்லாததால் வேகமாக நீந்துவதற்கு சாதகமான சூழ்நிலை இருந்தது. ஜெல்லி மீன்களாலும் பாதிப்பு இல்லை. இந்திய கடல் எல்லையை அடைந்தபோது, 2 முறை மழை பெய்தது. இருப்பினும் அவருக்கு நீந்துவதற்கு சாதகமாகவே கடல் நீரோட்டம் இருந்தது. சுமார் 56 கிலோமீட்டர் தூரத்தை 22 மணி நேரம் 20 நிமிடத்தில் கடந்துள்ளார்.

இதுவரை யாரும் தலைமன்னாரில் இருந்து ராமேசுவரம் வரை நீந்தியது இல்லை. முதல்முறையாக சிறுவன் லக்சய் கிருஷ்ணகுமார் இந்த புதிய சாதனையை படைத்துள்ளார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சிறுவன் லக்சய் கிருஷ்ணகுமாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments