காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: தமிழ்நாட்டில் ஒரு வாரத்துக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பு 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்




காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வளிமண்டல கீழடுக்கு காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்துக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், இன்று (வெள்ளிக்கிழமை) 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒரு வாரத்துக்கு மழை

மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. மேலும் வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இருக்கிறது.இந்த 2 நிகழ்வுகள் காரணமாக அடுத்த ஒரு வாரத்துக்கு தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

மேலும், அரபிக்கடலில் நிலவும் தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து புயலாக மாறுமா? என்பது பற்றி பின்னர் தெரிவிக்கப்படும் என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுமட்டுமல்லாமல், நாளை (சனிக்கிழமை) வங்கக்கடலில் மேலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகுவதற்கான சாதகமான சூழலும் இருக்கிறது.

15 மாவட்டங்களில்...

தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழை அடுத்த ஒரு வாரத்துக்கு பெய்ய உள்ள நிலையில், கனமழைக்கான வாய்ப்பும் அதிகளவில் இருக்கிறது. அந்தவகையில் இன்று திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், நாளை (சனிக்கிழமை) திருப்பூர், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

கனமழை பெய்யும் இடங்கள்

அதன் தொடர்ச்சியாக நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், கோவை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும்.

14-ந்தேதி (திங்கட்கிழமை) திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்பு இருக்கிறது.

பருவமழை முன்கூட்டியே தொடங்குகிறதா?

இதனைத்தொடர்ந்தும், தமிழ்நாட்டுக்கு மழைக்கான வாய்ப்பு அதிகளவில் இருப்பதாகவும், அரபிக்கடல், வங்கக்கடலில் அடுத்தடுத்து நிலவும் நிகழ்வுகளை பொறுத்து, வரும் நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்குவது தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.வழக்கமாக வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3-வது வாரத்தில் தொடங்கக் கூடும். ஆனால் நடப்பாண்டில் பருவமழை முன்கூட்டியே தொடங்குவதற்கான சாதகமான சூழல் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments