பேராவூரணி அருகே திருடிய ரூ.70 ஆயிரத்தை சாலையில் வீசி விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்கள் மீட்டு தந்த வாலிபருக்கு பாராட்டு




பேராவூரணி அருகே திருடிய ரூ.70 ஆயிரத்தை திருடிய மர்ம நபர்கள் அதை சாலையில் வீசி விட்டு தப்பி சென்றனர். அந்த பணத்தை மீட்டு தந்த வாலிபரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள்.

வங்கியில் பணம் எடுத்த பெண்

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துமாணிக்கம் மனைவி பரிமளா (வயது52). இவர் நேற்று காலை சேது சாலையில் உள்ள வங்கியில் இருந்து ரூ.70 ஆயிரத்தை எடுத்து, அதை ஒரு பையில் வங்கி கணக்கு புத்தகத்துடன் வைத்து தனது ஸ்கூட்டரின் இருக்கைக்கு கீழே வைத்துக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

வழியில் சேது சாலை ரெயில்வே கேட் அருகே உள்ள டீக்கடையில் டீ குடிப்பதற்காக ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு சென்றார். அப்போது மர்ம நபர்கள் 2 பேர் ஸ்கூட்டரில் இருந்த பணப்பையை திருடிக்கொண்டு சேதுபாவாசத்திரம் சாலையில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றனர். அவர்களை அந்த கடையில் நின்றிருந்த பேராவூரணியை சேர்ந்த ரியாஸ் (25) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் துரத்திச்சென்றார்.

பணம் மீட்பு

அவர் துரத்தி வருவதை பார்த்த மர்ம நபர்கள் 2 பேரும் பூக்கொல்லை பூனைக்குத்தி காட்டாறு அருகே பணப்பையை வீசி உள்ளனர். அதில் இருந்த பணத்தையும், வங்கி புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களையும் ரியாஸ் பத்திரமாக மீட்டு டீக்கடை உரிமையாளர் ரவியிடம் கொடுத்தார்.

பின்னர் அந்த பணம் பரிமளாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது பரிமளா கண்ணீர் மல்க ரியாஸிற்கு நன்றி தெரிவித்தார். இதுதொடர்பாக பேராவூரணி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பணத்தை மீட்ட ரியாசுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments