பாம்பன் புதிய பாலத்தில் 16 பெட்டிகளுடன் சரக்கு ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது




பாம்பன் புதிய பாலத்தில் 16 பெட்டிகளுடன் சரக்கு ரெயிலை இயக்கி வெற்றிகரமாக நேற்று சோதனை ஓட்டம் நடந்தது.

சரக்கு ரெயிலை இயக்கி சோதனை

ராமநாதபுரம் மாவட்டத்துடன் ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடல் நடுவே அமைந்துள்ள பாம்பன் ரெயில் பாலம் முக்கிய பங்கு வகித்தது. இந்த பாலம் கட்டப்பட்டு சுமார் 105 ஆண்டுகளை கடந்து மிகவும் பழமையான பாலம் ஆகிவிட்டதால் அந்த பாலத்தின் அருகிலேயே ரூ.545 கோடியில் புதிதாக ரெயில் பாலம் கட்டப்பட்டு, திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது.

புதிய பாலத்தில் அவ்வப்போது சரக்கு ரெயில் மற்றும் என்ஜினை இயக்கி சோதனை ஓட்டமும் நடந்து வருகிறது. பாலத்தின் மையப்பகுதியில் உள்ள செங்குத்து வடிவிலான தூக்குப்பாலத்தை திறந்து மூடும் சோதனைகளும் வெற்றிகரமாக நிறைவுபெற்றன.

இந்த நிலையில் நேற்று மீண்டும் சரக்கு ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதற்காக மதுரையில் இருந்து 16 காலி சரக்கு பெட்டிகளுடன் ரெயில் அனுப்பி வைக்கப்பட்டு, மண்டபம் ரெயில் நிலையம் சென்று அடைந்தது.

40 கி.மீ. வேகம்

நேற்று மதியம் 1 மணி அளவில் மண்டபம் ரெயில் நிலையத்தில் இருந்து 16 பெட்டிகளுடன் அந்த சரக்கு ரெயில் பாம்பன் புதிய பாலம் வழியாக ராமேசுவரம் நோக்கி புறப்பட்டது.

பாலத்தில் சுமார் 40 கிலோ மீட்டர் வேகத்தில் அந்த ரெயில் இயக்கப்பட்டது. தூக்குப்பாலத்தையும் வெற்றிகரமாக கடந்து சென்றது. தொடர்ந்து, பாம்பன், அக்காள்மடம், தங்கச்சிமடம் வழியாக ராமேசுவரம் ரெயில்வே நிலையம் வரை சென்று சேர்ந்தது.

புதிய ரெயில் பாலத்தில் சரக்கு ரெயில் சென்றதை ரோடு பாலத்தில் நின்றபடி ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர்

இது குறித்து ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “பாம்பன் புதிய ரெயில் பாலத்தை இன்னும் சில நாட்களில் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு செய்ய வருகிறார். அவரது ஆய்வுக்கு பின்னர் பாலம் திறப்பு விழா தேதி முடிவு செய்யப்படும். இந்த மாத இறுதிக்குள் பாலம் திறக்கப்படலாம்” என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments