ரெயில் டிக்கெட் முன்பதிவுக்கான காலம் 60 நாட்களாக குறைப்பு இந்திய ரெயில்வே அறிவிப்பு




ரெயில் டிக்கெட் முன்பதிவுக்கான காலம் 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்பட்டு உள்ளதாக இந்திய ரெயில்வே அறிவித்து உள்ளது.

தற்போது 120 நாட்கள்

தொலைதூர பயணங்களுக்கு மக்கள் அதிகமாக விரும்பும் பயணம் ரெயில் பயணம் ஆகும். விமானத்தை கணக்கிடும்போது ரெயில் கட்டணம் மிகவும் மலிவானது என்பதால் மக்களின் நாட்டம் இதில் அதிகமாக உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை ஆண்டுக்கு 30 முதல் 35 கோடி பேர் ரெயிலில் முன்பதிவு செய்து பயணிக்கிறார்கள்.

இந்த முன்பதிவுக்கான காலம் தற்போது 120 நாட்களாக உள்ளது. அதாவது 4 மாதங்களுக்கு முன்பே ரெயில் பயணத்தை திட்டமிட்டு முன்பதிவு செய்ய முடியும். இது வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு 365 நாட்கள் அதாவது ஒரு ஆண்டாக இருக்கிறது.

60 நாட்களாக குறைப்பு

இதற்கிடையே இந்த முன்பதிவு காலத்தை 60 நாட்களாக குறைத்து இந்திய ரெயில்வே மற்றும் சுற்றுலாக்கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 60 நாட்களாக குறைக்கப்பட்ட இந்த நடைமுறை அடுத்த மாதம் (நவம்பர்) 1-ந் தேதியில் இருந்து அமலாகும்.

ஆனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான ஓராண்டு காலவரம்பில் எந்த மாற்றமும் இல்லை. அதைப்போல சில பகல் நேர ரெயில்களுக்கான 4 மாத முன்பதிவு காலத்திலும் மாற்றம் இல்லை.

முன்பதிவு காலம் குறைப்பு 1-ந்தேதியில் இருந்துதான் அமலாகும் என்பதால் ஏற்கனவே டிக்கெட் எடுத்தவர்களுக்கும், வருகிற 31-ந் தேதி வரை டிக்கெட் எடுக்கிறவர்களுக்கும் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments