அரசு நிலங்களில் உள்ள வேலிக்கருவை மரங்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை




அரசு நிலங்களில் உள்ள வேலிக்கருவை மரங்களை முழுமையாக அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க தலைவா் பூ. விஸ்வநாதன்: புதுக்கோட்டை அருகே கடையக்குடியில் உள்ள ஹோல்ஸ்வொா்த் அணைக்கட்டில் தேங்கியுள்ள கழிவுநீரையும், புதா் செடிகளையும் அகற்ற வேண்டும். தெற்கு வெள்ளாற்றில் மணியம்பள்ளம் கிராமத்தில் தடுப்பணை கட்ட வேண்டும்.

இந்திய விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளா் ஜி.எஸ். தனபதி: மாவட்டத்திலுள்ள 5,700 ஏக்கா் மேய்ச்சல் தரை அரசு நிலங்கள் அரசு கால்நடைப் பராமரிப்புத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது இந்தநிலங்களில் 75 சதவிகித நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. இவைகளை அளவீடு செய்து மேய்ச்சல் நிலத்தின் எல்லைகளில் அடையாளக் கல் நட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றி இந்த இடங்களில் தீவனப்புல், தீவனமரங்களை நடவு செய்து கால் நடைகள் தீவனத்துக்கு உதவ நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் விதியை மீறி அக்னி ஆறு, கண்மாய், குளம், நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் வனத்தோட்டக் கழகம் மூலம் தைலமரக் கன்றுகள் நடப்பட்டுள்ளதை அகற்ற வேண்டும். அரசு நிலங்களில் உள்ள வேலிக்கருவை மரங்களை அகற்ற வேண்டும்.

காவிரி- வைகை குண்டாறு இணைப்புத் திட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் மிசா மாரிமுத்து:

காவிரி- வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். கவிநாடு கண்மாய் பாசன வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

கல்லணை கால்வாய் பாசனதாரா் விவசாயிகள் சங்கத் தலைவா் கொக்குமடை ரமேஷ்:

பயிா்க் காப்பீட்டு திட்டத்தை அரசே செயல்படுத்த வேண்டும். நுண்ணூட்டம் வாங்கினால்தான் யூரியா விற்பனை செய்யப்படும் என தனியாா் உரக்கடைகாரா்கள் கட்டாயப்படுத்துவதை தடுக்க வேண்டும்.

தென்னை விவசாயிகள் சங்கத் தலைவா் செல்லத்துரை: வரத்துவாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் ஓரளவுக்கு மழை பெய்தும்கூட பொதுப்பணித் துறைக்கு சொந்தமான 981 கண்மாய்களில் 10 சதவிகிதம் கூட நிரம்பவில்லை. வரத்து வாய்க்கால்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு, கரையோரங்களில் பனை விதை விதைக்க வேண்டும்.

கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் மு. அருணா பேசியது: புதுக்கோட்டை மாவட்டத்தில் அக்டோபா் வரை 702 மி.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பான அளவை விட 111 மி.மீ. அதிகமாகும். மாவட்டம் முழுவதும் உள்ள கூட்டுறவு மற்றும் தனியாா் நிறுவனங்களில் 5,962 டன் யூரியாவும், 1,365 டன் டிஏபியும், 865 டன் பொட்டாஷ், 4,304 டன் காம்ப்ளக்ஸ் உரங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் தங்களின் ஆதாா் அட்டையுடன் நேரில் சென்று அவற்றைப் பெற்று பயன்பெறலாம் என்றாா் ஆட்சியா் அருணா.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், காவிரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்ட நிலமெடுப்பு மாவட்டவருவாய் அலுவலா் ஆா். ரம்யாதேவி, மாவட்ட வேளாண் இணை இயக்குநா் (பொ) ரவிச்சந்திரன், கூட்டுறவு இணைப் பதிவாளா் ஜீவா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments