கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 387 மனுக்கள் பெறப்பட்டன




புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 387 மனுக்கள் பெறப்பட்டன.

மனம் திருந்தி மனு

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அருணா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். பொதுமக்கள் பலர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். திருக்கட்டளையை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தான் குற்ற வழக்குகளில் கடந்த 22 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்ததாகவும், இதனால் மன நிம்மதியின்றி தவிப்பதாகவும், தவறை உணா்ந்து திருந்தி வாழ முயற்சிப்பதாகவும், நிலுவையில் உள்ள வழக்குகளை நீதிமன்றத்தில் ஆஜராகி முடித்து கொள்வதாகவும், இனி எந்த குற்றச்செயலிலும் ஈடுபடாமல் இருப்பதாகவும் என மனு அளித்தார்.

387 மனுக்கள்

கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 387 மனுக்கள் குவிந்தன. அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க கலெக்டர் அருணா உத்தரவிட்டார். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மக்கள் வருகை அதிகமாக இருந்ததால் மனுக்கள் பதியும் இடத்தில் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது.

கூட்டத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில், 2021-ம் ஆண்டில் சிறப்பாக கொடிநாள் நிதி வசூல் புரிந்தமைக்காக, தமிழக கவர்னரால் வழங்கப்பட்டுள்ள பாராட்டுச் சான்றிதழினை, மாவட்ட வழங்கல் அலுவலர் (ஓய்வு) சுப்பையாவுக்கும், 2023-ம் ஆண்டிற்கான கொடிநாள் இலக்கினை முழுமையாக எய்திய பல்வேறு அரசுத்துறை சார்ந்த அலுவலர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

சுழற்கோப்பை

அதனைத்தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டதன் அடிப்படையில், அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமாருக்கு சுழற்கோப்பை வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் கூடுதல் கலெக்டா் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜராஜன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments