புதுக்கோட்டையில் பிரேக் பிடிக்காமல் சென்ற அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதி நின்றது 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்




புதுக்கோட்டையில் பிரேக் பிடிக்காமல் சென்ற அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதி நின்றது. 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

பணிமனை

புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தின் பின்புறம் அரசு போக்குவரத்து கழக பணிமனை உள்ளது. இதில் பஸ்கள் பராமரிப்புக்கு செல்வதோடு, பஸ்களும் நிறுத்தி வைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு அரசு பஸ் ஒன்று சென்றது. அறந்தாங்கியில் இருந்து திருச்சி செல்லக்கூடிய அந்த பஸ், புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கோவில் பக்கம் திரும்பி பணிமனை நோக்கி வந்தது. அப்போது பஸ்சில் பிரேக் பிடிக்காமல் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சென்றது. அந்த நேரத்தில் எதிரே இரு சக்கர வாகனத்தில் 2 பேர் வந்தனர். அவர்கள் பஸ் வரும் நிலையை பார்த்து, நிலைகுலைந்து மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு குதித்து தப்பினர். அப்போது பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதி, தரையில் சிறிது தூரம் இழுத்து சென்றது. மேலும் மோட்டார் சைக்கிள் மீது பஸ்சின் முன்சக்கரம் ஏறியது. மேலும் பஸ் அதன்பின் நகரவில்லை.

உயிர் தப்பினர்

கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அருகில் ஆட்டோ நிறுத்தத்தில் இருந்தவர்கள் அலறி அடித்து ஓடிவந்தனர். அதேநேரத்தில் பஸ் பிரேக் பிடிக்காமல் சென்றதால் பஸ்சில் இருந்த கண்டக்டர் இறங்கி ஓடி வந்து எச்சரிக்கை விடுத்தார்.

மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு தப்பியதால் அதில் வந்த 2 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். மேலும் பஸ்சில் பயணிகள் யாரும் இல்லாததால் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. பஸ் மோதியதில் மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்தது. மோட்டார் சைக்கிளை அப்புறப்படுத்திய பின் அரசு பஸ் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments