வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை புதுக்கோட்டையில் கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் பாதிப்பு மீன்பிடி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிப்பு




வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை காரணமாக புதுக்கோட்டை விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் பாதிப்படைந்தது. மேலும் மீன்பிடி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

பரவலாக மழை

வங்கக்கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், புயலாகவும் உருவெடுத்தது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கன மழையும், பரவலாக மழையும் பெய்தது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த வாரம் முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. ஓரிரு நாட்கள் இடைவிடாமல் மழை பெய்தது. மேலும் சில நாட்கள் சாரல் மழை பெய்தது.

தொடர்ந்து மழைக்கு மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனால் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேலும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது. தொடர்ந்து நேற்றும் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது.

விசைப்படகுகள்

இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை காரணமாக கடந்த 25-ந் தேதி முதல் புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. தொடர்ந்து நேற்றும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. மழை மற்றும் புயல் நிறைவடையும் வரையில் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் இருந்து சுமார் 600 விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

மீன்கள் விற்பனை

கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினத்தில் இருந்து வழக்கமாக திங்கட்கிழமை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை கரைக்கு திரும்பி வந்த பின் ஓய்வெடுப்பார்கள். அதன்பின் புதன்கிழமை கடலுக்கு சென்று, மறுநாள் காலை வியாழக்கிழமை திரும்பி வந்த பின், சனிக்கிழமை அதிகாலை சென்று மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை கரை திரும்புவார்கள். ஒரு படகில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் மதிப்பிலான மீன்கள் பிடிபடும். மீனவர்கள் வலையில் சிக்கும் மீன்கள் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமில்லாமல் பக்கத்து மாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படும். வியாபாரிகள் போட்டிப்போட்டு வாங்கி செல்வார்கள். தனியார் நிறுவனங்களும் மீன்களை மொத்தமாக கொள்முதல் செய்யும். இதனால் 2 மீன்பிடி தளங்களில் மீன்கள் வியாபாரத்தில் கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் நடைபெறும். இந்த மீன்பிடி தொழிலை நம்பி மீனவர்கள், தொழிலாளர்களும் ஏராளமானோர் உள்ளனர்.

வா்த்தகம் பாதிப்பு

இந்த நிலையில் மழை எச்சரிக்கை காரணமாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது. கடந்த ஒருவாரமாக மீன்கள் விற்பனை இல்லாமல் போனது. மேலும் மீனவர்கள், மீன்பிடி மற்றும் மீன்பிடி சாா்ந்த தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். புயல் கரையை கடந்து மழை நின்ற பின் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி கிடைக்கும் என மீனவர்கள் எதிர்பார்த்துள்ளனர். அதுவரை அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments