முத்துக்குடா கடற்கரையில் 50 ஏக்கரில் அலையாத்தி காடு அமைக்க திட்டம்




முத்துக்குடா கடற்கரையில் 50 ஏக்கரில் அலையாத்தி காடு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அலையாத்தி காடு

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடற்கரை பகுதி சுமார் 42 கிலோ மீட்டர் தூரம் அமைந்துள்ளது. கடற்கரையையொட்டிய பகுதிகளில் ஆங்காங்கே அலையாத்தி காடுகள் காணப்படுகின்றன. கடல் அலைகளை கட்டுப்படுத்தவும், கடல் நீர் ஊருக்குள் புகாமல் தடுக்கவும், ஆறு, கால்வாய் நீர் கடலில் கலக்கும் இடங்களின் அருகேயும் இந்த அலையாத்தி காடுகள் பயன்படுகிறது. மேலும் இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாக்கவும், கடலில் மீன்வளத்தை அதிகரிக்கவும் இந்த காடுகள் உபயோகமாக உள்ளன.

மாவட்டத்தில் கட்டுமாவடி, முத்துக்குடா உள்ளிட்ட இடங்களில் அலையாத்தி காடுகள் பரப்பளவு சற்று அதிகமாக இருக்கும். முத்துக்குடாைவ சுற்றுலா தலமாக்கி அலையாத்தி காடுகளை படகுகளில் சென்று ரசித்து பார்க்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது.

முத்துக்குடா

இதற்கிடையே தமிழகத்தை பசுமையாக்கல் திட்டம் மூலமும், வனப்பரப்பை அதிகரிக்கும் வகையிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. மேலும் அலையாத்தி காடு அமைக்கப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே மும்பாலையில் கடற்கரை பகுதியில் 50 ஏக்கர் பரப்பளவில் அலையாத்தி காடு அமைப்பதற்காக வாய்க்கால் வெட்டப்பட்டு, அலையாத்தி மரக்கன்றுகள் கடந்த ஆண்டு நடப்பட்டன. அவை தற்போது நன்கு வளர்ந்து வருகிறது.

இந்த நிலையில் அதன்தொடர்ச்சியாக முத்துக்குடாவில் 50 ஏக்கர் பரப்பளவில் அலையாத்தி காடு அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மீன் முள் வடிவம்

முத்துக்குடாவில் ஏற்கனவே அலையாத்தி காடுகள் உள்ள நிலையில், அதன் அருகே சற்று தள்ளி பாம்பாறு, முத்துக்குடா கடல் பகுதியின் அருகே வாய்க்கால் ெவட்டி, அலையாத்தி மர விதைகள் விதைக்கப்பட உள்ளன. இந்த பணிகள் விரைவில் தொடங்குகிறது. இதன்மூலம் கடல் வளம் பாதுகாக்கப்பதோடு, அலையாத்தி காடு உருவாவதின் மூலம் பறவைகள் அதிகளவு வந்து செல்லும், மற்றும் பறவையினங்கள் பெருகும்.மும்பாலையில் அமைக்கப்பட்டதை போல மீன் முள் வடிவில் வாய்க்கால் வெட்டப்பட்டு, அலையாத்தி காடு அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments