புதுக்கோட்டையில் கடற்கரை பகுதிகளில் கனமழை பெய்தது. மழையின் காரணமாக மாவட்டத்தில் 41 வீடுகள் சேதமடைந்தன. மேலும், 12 கால்நடைகள் செத்தன.
பள்ளிகளுக்கு விடுமுறை
வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த 2 நாட்களுக்கு மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 11-ந் தேதி இரவு முதல் நேற்று முன்தினம் வரை பரவலாக மழை பெய்தது. இதில் கடற்கரை பகுதிகளில் கன மழை பெய்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மழையின் காரணமாக நேற்று முன்தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்றும் மழை தொடர்ந்தது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அருணா உத்தரவிட்டார். இதைத்தொடந்து நேற்று பள்ளிகளுக்கு 2-வது நாளாக விடுமுறை விடப்பட்டன. மாவட்டத்தில் நேற்று ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டிருந்த நிலையில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.
மழைநீர் தேங்கியது
புதுக்கோட்டை மாநகர பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இடையில் மழை விட்டு, விட்டும் பெய்தது. சாலையில் நடந்து சென்றவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் பெரும்பாலும் மழை கோட் அணிந்தும், குடைகளை பிடித்தப்படியும் சென்றனர். சிலர் மழையில் நனைந்தப்படி சென்றனர். தொடர் மழையின் காரணமாக புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் குளம் போல் மழைநீர் தேங்கியது. மேலும் ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மழைநீர் வடிகால்களில் கழிவுநீரும், மழைநீரும் பெருக்கெடுத்து ஓடியது. மதியத்திற்கு மேல் மழை நின்றது. ஆனால் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆவுடையார்கோவிலில் 143 மி.மீட்டரும், மணமேல்குடியில் 135.20 மி.மீ., மீமிசலில் 67 மி.மீ., நாகுடியில் 66.20 மி.மீட்டரும் மழை பதிவானது.
41 வீடுகள் சேதம்
இந்த மழையால் குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் என மொத்தம் 41 வீடுகள் சேதமடைந்தன. 3 மாடுகள், 9 ஆடுகள் என 12 கால்நடைகள் செத்தன. இந்த நிலையில் நேற்றும் தொடர் மழையினால் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் வீடுகள் சேதமடைந்தன. அதனையும் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. மாவட்டத்தில் தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. மாவட்டத்தில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியதால் பொதுமக்கள் வீட்டிற்குள்ளே முடங்கினர்.
திருவப்பூர் பகுதியில் மாங்குளத்தில் இருந்து உபரிநீர் வெளியேறி மழைநீர் வடிகாலில் பெருக்கெடுத்து சாலையில் ஓடியது. மேலும் காலிமனைகளில் புகுந்து தேங்கியது. சாலையில் ஓடிய மழைநீரில் மக்கள் வாகனங்களிலும், நடந்தும் சென்றதில் அவதி அடைந்தனர். சாலையில் ஓடிய நீரை வெளியேற்றவும், மழைநீர் வடிகாலில் செல்லும் வகையிலும் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் பணி மேற்கொள்ளப்பட்டது.
மீனவ கிராமத்தில் மழைநீர் சூழ்ந்தது
மணமேல்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள், கடலோரப் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக இரவு, பகல் பாராமல் கனமழை கொட்டி வருகிறது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மணமேல்குடி காந்திநகர், செங்குந்தர்புரம், வடக்கு அம்மாபட்டினம், கீழக்குடியிருப்பு, குலச்சிறையார் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. மேலும் வீடுகளிலும் மழைநீர் புகுந்துள்ளது.
இதேபோல் பொன்னகரம் மீனவ கிராமம் முழுவதும் மழை நீரால் சூழப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழை நீரை அகற்றுவது சிரமமாக உள்ளது. பொன்னகரம் மீனவ கிராம மக்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வீட்டிற்குள்ளே முடங்கி உள்ளனர்.
மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
மணமேல்குடி பகுதி முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மணமேல்குடி பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தொடர்ந்து அதிகாலை முதல் மழை பெய்து வந்ததால் மணமேல்குடி கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது. பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை. மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் மணமேல்குடி, கட்டுமாவடி மீன் மார்க்கெட்டுகள் மீன் வரத்து இல்லாமல் காணப்பட்டது. மணமேல்குடி சுற்று வட்டார கிராமங்களில் உள்ள வயல்கள் மழைநீரால் மூழ்கியுள்ளது. கண்மாய்கள், குளங்கள் நிரம்பி உள்ளன.அம்மாபட்டினம் கிழக்கு கடற்கரை சாலை முழுவதும் மழை நீரால் சூழ்ந்துள்ளது. இதனால் இப்பகுதி செல்லும் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. மணமேல்குடி, கோடியக்கரை கடற்கரை பகுதி முழுவதும் மழைநீரால் சூழ்ந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மற்றும் முன்னோர்களுக்கு திதி கொடுக்க வருபவர்கள் வர வேண்டாம் என வனத்துறை தடை விதித்தது. மேலும் மணமேல்குடி பஸ் நிலையம் பின்புறம் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை மழைநீரால் சூழ்ந்துள்ளதால் விற்பனையாளர்கள், மதுபிரியர்கள் செல்ல முடியாத சூழல் நிலவியது. இதனால் டாஸ்மாக் கடை நேற்று மூடப்பட்டது.
திருவரங்குளம்
திருவரங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மேட்டுப்பட்டி, திருக்கட்டளை, கைக்குறிச்சி, பூவரசங்குடி, பாண்டா கோட்டை, வல்லத்திரா கோட்டை, கத்தக்குறிச்சி, குலவாய்ப்பட்டி, வேப்பங்குடி, மாங்கனாம்பட்டி, காயாம்பட்டி, கல்லு பள்ளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பொதுமக்கள் தங்களது வீடுகளில் முடங்கியுள்ளனர். திருவரங்குளம் சிவன் கோவிலில் மழைநீர் சூழ்ந்ததால் பக்தர்கள் அவதியடைந்தனர்.
![]() |
மணமேல்குடி காந்தி நகரில் வீட்டை சூழ்ந்துள்ள தண்ணீர். |
![]() |
மணமேல்குடி அண்ணா நகரை சூழ்ந்துள்ள மழைநீர். |
![]() |
பொன்னகரம் மீனவ குடியிருப்பு சாலையில் குளம்போல் தேங்கியுள்ள மழைநீரை படத்தில் காணலாம். |
![]() |
புதுக்கோட்டை அடப்பன் வயல் குளத்தில் கலிங்கு வழியாக தண்ணீர் பாய்ந்தோடுவதையும், அதில் சிறுவர்கள் விளையாடியதையும் படத்தில் காணலாம். |
![]() |
திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவில் அருகே உள்ள குளம் நிரம்பி படித்துறை வரை தண்ணீர் உள்ளதை படத்தில் காணலாம். |
![]() |
திருக்கோகா்ணம் குளத்தில் இருந்து மழைநீர் வடிகாலில் இருந்து வெளியேறி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி நுழைவு வாயில் வழியாக வளாகத்திற்கு சென்ற காட்சி. |
![]() |
மணமேல்குடி அருகே அம்மாபட்டினத்தில் சாலையில் ஆறுபோல மழைநீர் பெருக்கெடுத்து ஓடிய காட்சி. |
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.