கனமழை: தாழ்வான பகுதிகளில் வெள்ளம்; ஆவுடையாா்கோவில் பள்ளி துண்டிப்பு: சராசரி மழை அளவு 40.09 மி.மீ.




புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி 12 மணிநேர சராசரி மழை அளவாக 40.09 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனால், தாழ்வான குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீா் சூழ்ந்துள்ளது.

ஆவுடையாா்கோவில் அரசு மகளிா் பள்ளி வளாகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை இரவு முதலே கடலோரப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கி வருகிறது. குறிப்பாக வரத்து வாரி அருகேயுள்ள ஆவுடையாா்கோவில் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தை வெள்ளநீா் சூழ்ந்து வெள்ளக்காடாக்கியுள்ளது. ஏனெனில் இந்தப் பகுதியில் உள்ள ஆவுடையாா்கோவில் கண்மாய், புண்ணியவயல் கண்மாய், பன்னியூா் கண்மாய் ஆகிய கண்மாய்களில் இருந்து வரும் உபரி வெள்ளநீா், இப்பள்ளியின் அருகேயுள்ள சிறிய வரத்துவாரி வழியேதான் செல்ல வேண்டும். எனவே, உபரிவெள்ளநீா் இந்த வாரியின் வழியே சனிக்கிழமை காலை முதல் சென்று கொண்டிருக்கிறது. மேலும் மழைக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று எதிா்பாா்க்கப்படுவதால், உபரி வெள்ளநீரின் போக்கு ஓரிரு நாள்கள் நீடிக்கும் எனத் தெரிகிறது.

இதுகுறித்துத் தகவலறிந்து அங்குவந்த ஆவுடையாா்கோவில் வட்டாட்சியா் மாா்ட்டின் லூதா் கிங் தலைமையிலான வருவாய் மற்றும் கல்வித் துறையினா் பள்ளி வளாகத்தை தொலைவில் நின்று பாா்வையிட்டனா். ஏனெனில் பள்ளி வளாகத்துக்குச் செல்ல முடியாதவகையில் பள்ளிவாயில் முன்பே வெள்ளநீா் தேங்கிக்கிடக்கிறது. வாரியின் அடைப்புகளை நீக்கிவிட்டு வெள்ளநீா் விரைந்து வெளியேறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வருவாய்த் துறையினா் தெரிவித்துள்ளனா்.

குடியிருப்புகளைச் சூழ்ந்த வெள்ளம்...

புதுக்கோட்டை மாவட்ட கடலோரப் பகுதிகளான கிருஷ்ணாஜிபட்டினம், வடக்கு அம்மாபட்டினம், அம்மாபட்டினம் ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகளில் மழைநீா் தேங்கி நிற்கிறது. இந்தப் பகுதிகளில் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா் சனிக்கிழமை பகலில் சுமாா் ஆயிரம் வீடுகளுக்கு உணவு, பால், பிஸ்கட் உள்ளிட்ட பொருள்களை வழங்கினா். அப்போது, மாவட்டத் தலைவா் எச். சித்திக்ரகுமான் உடனிருந்தாா்.

பெட்டிச் செய்தி...

சனிக்கிழமை காலை 6.30 மணி வரையிலான 12 மணி நேர மழையளவு விவரம் (மி.மீ-இல்)

ஆதனக்கோட்டை- 35, பெருங்களூா் - 27.60, புதுக்கோட்டை நகரம் - 44.50, ஆலங்குடி- 42.80, கந்தா்வகோட்டை- 28.40, கறம்பக்குடி- 26.80, மழையூா் - 32.80, கீழாநிலை - 47.60, திருமயம்- 22.40, அரிமளம் - 34.40, அறந்தாங்கி - 58.80, ஆயிங்குடி- 73.40, நாகுடி - 90.20, மீமிசல் - 18.40.

ஆவுடையாா்கோவில் - 58.80, மணமேல்குடி- 55.50, இலுப்பூா்- 42.20, குடுமியான்மலை - 47.20, அன்னவாசல் - 40.20, விராலிமலை - 41, உடையாளிப்பட்டி- 34.40, கீரனூா் - 24.40, பொன்னமராவதி - 15.20, காரையூா்- 22.20. மாவட்டத்தின் சராசரி மழையளவு - 40.09 மி.மீ.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments