புதுக்கோட்டை மாவட்டத்தில் கடலில் செயற்கை பவளப்பாறைகள் அமைக்க திட்டம்




புதுக்கோட்டை மாவட்டத்தில் கடலில் செயற்கை பவளப்பாறைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கடற்கரை பகுதி

தமிழகத்தில் கடலில் மீன்வளத்தை பெருக்க கடற்கரையோர மீனவ கிராம பகுதியில் செயற்கை பவளப்பாறைகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடற்கரை மாவட்டமான புதுக்கோட்டையிலும் கடலில் செயற்கை பளவப்பாறைகள் அமைக்கப்பட உள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் 42 கிலோ மீட்டர் தூரம் கடற்கரை பகுதியாகும். சுமார் 32 கிராமங்கள் கடற்கரையோரம் அமைந்துள்ளன.

கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் விசைப்படகுகள் மீன்பிடி தளமும், கட்டுமாவடி, மணமேல்குடி மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் நாட்டுப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்தல்

பாக்ஜலசந்தி கடல் பகுதியில் அமைந்துள்ள கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருகின்றனர். விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலிலும், நாட்டுப்படகு மீனவர்கள் சற்று அதற்கு முன்பாகவும் மீன்பிடித்து கரை திரும்புவார்கள். இதற்கிடையில் கடலில் மீன்வளம் குறைவாக இருக்கின்ற காரணத்தால் மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடல் பகுதிக்கு செல்லும் போது அந்நாட்டு கடற்படையினரால் கைது செய்யப்படுகின்ற சம்பவமும் அடிக்கடி நடைபெறுகிறது.

மீனவர்கள் கைது செய்யப்படுவதோடு, அவர்களது விசைப்படகுகளும் பறிமுதல் செய்வதோடு, சிறை தண்டனையும், அதிக அபராதமும் விதிக்கப்படுவதால் மீனவர்கள் கடும் பாதிப்படைகின்றனர். அவர்களை சார்ந்த குடும்பத்தினர் பரிதவிக்கின்றனர்.

செயற்கை பவளப்பாறைகள்

இந்த நிலையில் தமிழக அரசின் செயற்கை பவளப்பாறை திட்டத்தை புதுக்கோட்டை மாவட்ட கடல் பகுதியிலும் செயல்படுத்தப்பட உள்ளது. செயற்கை பவளப்பாறை என்பது பவளப்பாறைகள் போன்றதாகும். சிமெண்டால் வட்டம், வட்டமாக குறிப்பிட்ட இடைவெளிகளுடன், குறிப்பிட்ட உயரத்திற்கு வடிவமைக்கப்பட்டிருக்கும். இதனை கடலில் தண்ணீரின் அடியில் வைக்கப்படும். அந்த இடைவெளிப்பகுதிகளில் மீன்கள் இனப்பெருக்கத்தின் மூலம் மீன்குஞ்சுகள் அதிகளவில் உற்பத்தியாகி, மீன் வளம் பெருகும். மீன் வளம் பெருகுவதின் மூலம் மீனவர்களுக்கு மீன்கள் அதிகம் கிடைக்கும். இதன்மூலம் மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படும்.

செயற்கை பவளப்பாறைகள் எத்தனை இடங்களில், எவ்வளவு எண்ணிக்கையில் அமைக்கப்படும் என்பது விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments