புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக அபிஷேக் குப்தா பொறுப்பேற்பு




புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக அபிஷேக் குப்தா பொறுப்பேற்றார்.

போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு

தமிழக காவல்துறையில் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த வந்திதா பாண்டே, திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வில் பணியிட மாறுதலில் சென்றார். அவருக்கு பதிலாக திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா, புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து அவர் நேற்று காலை புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். புதிதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்ற அபிஷேக் குப்தாவுக்கு கூடுதல் சூப்பிரண்டு, துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

கலந்தாய்வு கூட்டம்

போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா கடந்த 2019-ம் ஆண்டு ஐ.பி.எஸ். பணியில் சேர்ந்தார். தூத்துக்குடி, விழுப்புரம் மாவட்டங்களில் உதவி போலீஸ் சூப்பிரண்டாகவும், திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமிஷனராகவும் பணியாற்றிருக்கிறார்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்ற அபிஷேக் குப்தா முதல் நாளிலே நேற்று காவல்துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார். இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, துணை சூப்பிரண்டுகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். இதில் போலீசார் சிறப்பாக பணிபுரியவும், சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு துணை போக கூடாது என போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா அறிவுறுத்தினார். முன்னதாக போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தாவுக்கு காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை அளிக்கப்பட்டது.

51-வது போலீஸ் சூப்பிரண்டு

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 1974-ம் ஆண்டு முதல் இதுவரை 50 போலீஸ் சூப்பிரண்டுகள் பணியாற்றியுள்ளனர். தற்போது 51-வது போலீஸ் சூப்பிரண்டாக அபிஷேக் குப்தா நேற்று பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments