பொங்கல் பண்டிகையையொட்டி அறந்தாங்கி வழியாக தாம்பரத்திற்கு 19-ந் தேதி சிறப்பு ரெயில் புதுக்கோட்டை மார்க்கத்திலும் இயக்க பயணிகள் கோரிக்கை




பொங்கல் பண்டிகையையொட்டி அறந்தாங்கி வழியாக தாம்பரத்திற்கு வருகிற 19-ந் தேதி சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இதேபோல் புதுக்கோட்டை மார்க்கத்திலும் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறப்பு ரெயில்கள்

பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு ரெயில் இயக்கப்படுவது தொடர்பாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் பண்டிகைக்கு முந்தைய நாட்களிலும், பண்டிகை முடிந்த பின் திரும்பும் வகையில் பயணத்திற்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரிய ரெயில் நிலையமான புதுக்கோட்டை, அறந்தாங்கி வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

தாம்பரம்-கன்னியாகுமரி-தாம்பரம் சிறப்பு ரெயில் புதுக்கோட்டை வழியாகவும், தாம்பரம்-ராமநாதபுரம்-தாம்பரம் சிறப்பு ரெயில் அறந்தாங்கி வழியாகவும் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் பண்டிகை முடிந்து திரும்பும் வகையில் ராமநாதபுரத்தில் இருந்து தாம்பரத்திற்கு வருகிற 19-ந் தேதி சிறப்பு ரெயில் அறந்தாங்கி வழியாக இயக்கப்பட உள்ளது.

முன்பதிவு தொடங்கியது

ராமநாதபுரத்தில் இருந்து 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.30 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டு, மறுநாள் திங்கட்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு சென்றடையும். இந்த ரெயில் அறந்தாங்கி ரெயில் நிலையத்திற்கு 19-ந் தேதி மாலை 6.15 மணிக்கு வந்து 6.16 மணிக்கு புறப்படும்.

இந்த ரெயில் பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துபேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், பேரளம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர் துறைமுகம், பண்ரூட்டி, விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலுக்கான முன்பதிவு டிக்கெட்டுகளுக்கு முன்பதிவு தொடங்கியுள்ளது.

புதுக்கோட்டை மார்க்கம்

இந்த நிலையில் பொங்கல் பண்டிகை முடிந்து செல்ல வசதியாக தென் மாவட்டங்களில் இருந்து புதுக்கோட்டை மார்க்கத்திலும் தாம்பரம், சென்னைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே வழக்கமான ரெயில்களில் முன்பதிவு டிக்கெட்டு நிரம்பி, காத்திருப்போர் பட்டியலில் எண்ணிக்கை அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments