புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார்கோவில் உள்பட 6 தாசில்தார்கள் பணியிட மாற்றம் கலெக்டர் உத்தரவு




புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார்கோவில் உள்பட 6 தாசில்தார்களை பணியிடம் மாற்றம் செய்து கலெக்டர் அருணா உத்தரவிட்டார்.

தாசில்தார் பணியிட மாற்றம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கல்குவாரிகளில் முறைகேடு தொடா்பாக புகார் தெரிவித்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி லாரியை ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதாக திருமயம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் குணசேகரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் மாவட்டத்தில் நிர்வாக நலன் கருதி திருமயம் தாசில்தார் உள்பட 6 தாசில்தார்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருமயம் தாசில்தார் புவியரசனை புதுக்கோட்டை நெடுஞ்சாலை திட்டம் நிலம் எடுப்பு பிரிவு தனி தாசில்தாராக பணியிட மாற்றம் செய்து கலெக்டர் அருணா நேற்று உத்தரவிட்டார். சமூக ஆா்வலர் கொலை சம்பவம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அவர் திடீரென நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் செய்யப்பட்டது வருவாய்த்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வருவாய் ஆய்வாளர்கள்

இதேபோல நிர்வாக நலன் கருதி விராலிமலை தாசில்தார் கருப்பையா, அகதிகள் மறுவாழ்வு பிரிவு தனி தாசில்தாராகவும், புதுக்கோட்டை அகதிகள் மறுவாழ்வு பிரிவு தனிதாசில்தார் ரமேஷ், விராலிமலை தாசில்தாராகவும், ஆவுடையார்கோவில் தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங், காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம் தனி தாசில்தாராகவும் பணியிடம் மாற்றப்பட்டுள்ளார். காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்ட தனி தாசில்தார் பாலகிருஷ்ணன், ஆவுடையார்கோவில் தாசில்தாராகவும், ஆலங்குடி தனி தாசில்தார் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராமசாமி, திருமயம் தாசில்தாராகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையில் மாவட்டத்தில் தனி வருவாய் ஆய்வாளர்கள் 4 பேர் பணியிட மாற்றம் செய்து கலெக்டர் அருணா உத்தரவிட்டுள்ளார். இதில் புதுக்கோட்டை தனி வருவாய் ஆய்வாளர் (கனிமங்கள்) செந்தில்நாதன், தனி வருவாய் ஆய்வாளர் வரவேற்பு பிரிவுக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.

திருமயம் வருவாய் ஆய்வாளர்

இதேபோல வரவேற்பு பிரிவு தனி வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார், கலெக்டர் அலுவலகம் முதுநிலை வருவாய் ஆய்வாளர் `ஒய்' பிரிவுக்கும், திருமயம் சரக வருவாய் ஆய்வாளர் செல்வம், குன்றாண்டார்கோவில் சரக வருவாய் ஆய்வாளராகவும், குன்றாண்டார்கோவில் சரக வருவாய் ஆய்வாளர் சபிதா, திருமயம் சரக வருவாய் ஆய்வாளராகவும் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments