புதுக்கோட்டை மாவட்டத்தில் மினி பஸ்கள் இயக்க விண்ணப்பிக்கலாம் நாளை கடைசி நாள்




புதுக்கோட்டை மாவட்டத்தில் மினி பஸ்கள் இயக்க விண்ணப்பிக்கலாம் எனவும், நாளை (புதன்கிழமை) கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மினி பஸ்கள்

தமிழகத்தில் மினி பஸ்களுக்கான கட்டண திருத்தம் வருகிற மே மாதம் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இத்திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தின் நீளம் 25 கிலோ மீட்டர் ஆக இருக்க வேண்டும். குறைந்தபட்ச சேவை செய்யப்படாத தடத்தின் நீளம் சாலையின் மொத்த தட நீளத்தில் 65 சதவீதத்திற்கு குறைவாக இருக்க கூடாது.

மினி பஸ் சேவை தொடங்கும் புள்ளி, முனையப்புள்ளி என்பது இதுவரை பஸ் சேவை செய்யப்படாத குடியிருப்பு அல்லது கிராமத்தில் ஏதேனும் ஒன்றாக இருக்க வேண்டும். தடம் தொடங்கும் இடம் அல்லது முடியும் இடம் என்பது பஸ் நிறுத்தம் அல்லது பஸ் நிலையம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றாக இருக்க வேண்டும்.

கலெக்டர் அலுவலகம்

முனையப்புள்ளியில் இருந்து அடுத்த 1 கிலோ மீட்டர் தூரத்தில் அரசு மருத்துவமனை, மேல்நிலைப்பள்ளி, கல்லூரி, ரெயில் நிலையம், உழவர் சந்தை, வேளாண் ஒழுங்குமுறை சந்தை, கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், புகழ் பெற்ற வழிபாட்டு தலங்கள் அல்லது பஸ் நிலையத்திற்கு சற்று முன்பு உள்ள இடமாக இருக்கலாம்.

மேலும் வழங்கப்பட்ட பாதை அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட பாதை நீளத்தை விட அதிகமாக இருக்கும் போது வட்டார போக்குவரத்து அதிகாரி, மற்ற பங்குதாரர்களுடன் கலந்து ஆலோசித்து, மேற்கூறிய தேவைப்படும் இடங்களுக்கு பயணிகளை சென்றடைய உதவும் வகையில், சேவை பகுதியில் 1 கி.மீ. வரை கூடுதல் தூரத்தை அனுமதிக்கலாம். மேற்கூறிய இடங்களை தவிர மற்ற இடங்களுக்கு இது பொருந்தாது.

அனுமதி சீட்டு

பழைய மினி பஸ் திட்டத்தின் கீழ் ஏற்கனவே, அனுமதி பெற்ற உரிமையாளர்கள் இப்புதிய திட்டத்தின் கீழ் மாறுவதற்கு விருப்பத்தினை எழுத்துப்பூர்வமாக அளித்து அனுமதிச்சீட்டினை ஒப்படைக்க வேண்டும். இப்புதிய வழித்தடத்தில் குறைந்தபட்சம் 1.5 கி.மீ. ஏற்கனவே பஸ் வசதி இல்லாத தடமாக இருக்க வேண்டும்.

மினி பஸ் இருக்கைகள் டிரைவர் மற்றும் கண்டக்டர் இருக்கைகள் தவிர்த்து 25 ஆக இருக்க வேண்டும். மேலும், மினி பஸ்சின் சக்கரங்கள் அளவு 390 செ.மீ.க்கு மிகாமல் இருக்க வேண்டும். ஏற்கனவே நிலைப்பேருந்து அல்லது மினி பஸ் மூலம் பாதையின் ஒரு பகுதி அல்லது போதுமானதாக இல்லாத பாதைகளில் பொதுமக்கள் மேற்கொள்ளும் பயணங்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 4 நடைகளுக்கு குறைவாக இருந்தால் அவை சேவை செய்யப்படாத தடமாக கருதப்படும்.

விண்ணப்பிக்கலாம்

எனவே, அரசாணையின் நிபந்தனைகளுக்குட்பட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த மினி பஸ் இயக்க புதிய விரிவான திட்டம் 2024-ன் கீழ் வழித்தட வரைபடங்களுடன் கூடிய விண்ணப்பங்களை பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், தனியார் அமைப்புகள் மற்றும் பஸ் உரிமையாளர்கள் அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அதிகாரியிடம் நாளைக்கு (புதன்கிழமை) சமர்ப்பிக்கலாம்.

மேற்கண்ட தகவலை கலெக்டர் அருணா வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments