கடல் ஆமை, கடற்பசுக்களை பிடித்தால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை




கடல் ஆமை, கடற்பசுக்களை பிடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அருணா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடற்பசு

கடல் ஆமை மற்றும் கடற்பசுக்கள் அழிந்துவரும் இனம் ஆகும். வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி அவை பாதுகாக்கப்பட வேண்டும். மேலும் அவைகளை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடி முதல் ஏனாதி வரை கடலோர பகுதி ஆகும்.

இதில் கடல் ஆமைகள் இனப்பெருக்க காலமான தற்போது கடற்கரையோர பகுதிகளுக்கு வர வாய்ப்பு உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அம்மாப்பட்டினம், பொன்னகரம், கீழக்குடியிருப்பு மற்றும் கட்டுமாவடி பகுதியில் கடற்பசு அதிகமாக காணப்படும் பகுதிகள் ஆகும். இப்பகுதிகள் கடற்பசு பாதுகாப்பு பகுதிகளாக வரையறை செய்யப்பட்டுள்ளது.

ஊக்கத்தொகை

எனவே புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மீனவ கிராமங்களிலுள்ள மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் போது வலையில் கடல் ஆமைகள் மற்றும் கடற்பசு எதிர்பாராதவிதமாக பிடிபட்டால் அவைகளை கடலிலேயே திரும்ப விட்டு விட வேண்டும். அவ்வாறு கடல் ஆமை மற்றும் கடற்பசுக்களை பாதுகாத்தல் தொடர்பாக, தனது வலையில் பிடிபடும் கடல் ஆமை மற்றும் கடற்பசுக்களை மீண்டும் கடலிலேயே பாதுகாப்பாக விட்டு அதன் விவரத்தினை தெரிவித்தால் அதன்படி வனத்துறைக்கு பரிந்துரை செய்து சம்பந்தப்பட்ட மீனவருக்கு வனத்துறையின் மூலம் ஊக்கத்தொகை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும்.

நடவடிக்கை

மேலும் கடற்கரை பகுதியில் ஒதுங்கும் கடல் ஆமை மற்றும் கடற்பசுக்களை கடலிலேயே திரும்ப விடவும் அறிவுறுத்தப்படுகிறது. இதனை மீறி கடல் ஆமை மற்றும் கடற்பசுக்களை பாதுகாக்காமல் அவைகளை சட்ட விரோதமாக பிடிக்கும் மீனவர்கள் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்படி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் வனத்துறை சட்டத்தின்படி நடவடிக்கை எடுத்திட பரிந்துரை செய்யப்படும். எனவே புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கடலோர மீனவர்களுக்கு கடல் ஆமைகளை பாதுகாப்பது தொடர்பாக விழிப்புணர்வு கூட்டம் நடத்தி மீனவளத்துறையால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்கண்ட தகவலை கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments