50 ஆண்டுகள் கடந்தும் மண்ணறைக்கு (ஸதக்கதுன் ஜாரியாவாக) தொடர்ந்து செல்கின்ற தருமத்தின் எடுத்துக்காட்டாக கோபாலப்பட்டிணம் ரஹ்மானியா பெண்கள் மதரஸா திகழ்ந்து வருகிறது.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)..
இந்த பதிவு GPM மீடியா வாசகர்கள் அனைவரையும் பூரண நலத்துடன் சந்திக்க துஆ செய்தவனாக இந்த வரலாறை பதிவு செய்கிறேன்..
நமது கோபாலப்பட்டிணத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ரஹ்மானியா பெண்கள் மதரஸாவின் வரலாறு பற்றி உங்களுக்கு நினைவூட்டுவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா, நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியை சேர்ந்த மீமிசல் அருகே அமைந்துள்ள கோபாலப்பட்டிணம் என்ற கிராமத்தில் நூருல் அய்ன் என்ற புதிய கட்டிடத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்ற ரஹ்மானியா பெண்கள் மதரஸா கடந்த (08.03.1970 முதல் 04.12.2019 வரை) இயங்கி பொன்விழா கண்டு 50-வது வருடத்தில் காலெடுத்து வைத்திருப்பதை நாம் அனைவரும் அறிந்ததே. அதன் பிறகு நூருல் அய்ன் என்று அமைக்கப்பட்ட புதிய கட்டிடம் கடந்த 12.05.2022 அன்று நமது ஊர் ஜமாத்தார்களின் முழு ஒத்துழைப்போடு திறப்புவிழா கண்டு இப்பொழுது 08.03.2025 முதல் 56- வது ஆண்டில் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கின்றது.
இந்தகாலகட்டத்தில் இதன் வரலாறுகள் குறித்து இன்றைய மற்றும் எதிர்கால தலைமுறைக்கு தெரியாமலேயே இருந்து விடக்கூடாது என்பதற்காக அதனை சரியான முறையில் கொண்டு சேர்க்கும் விதமாக 55 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ரஹ்மானியா பெண்கள் மதரஸா உருவான வரலாறு பற்றி இந்த செய்தி தொகுப்பு விவரிக்கிறது. இது பற்றி உங்களுக்கு விவரிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
1970-வதுக்கு முன்னர் பெண் குழந்தைகளுக்கு குர்ஆன் பாடசாலை, பெண்கள் தொழுவதற்கு என தனியான இடம் ஏதும் இல்லை. அன்றைய காலகட்டத்தில் பெண் குழந்தைகள் ஆங்காங்கே ஒரு சில வீடுகளுக்கு சென்று குர்ஆனை கற்று வந்தனர். மேலும் பெண்களுக்கான தொழுகை கல்லுக்குளம் அருகில் உள்ள சின்னப்பள்ளிவாசல் தர்காவில் நடைபெற்று வந்தது. நமதூரில் அக்காலகட்டத்தில் பெரியளவு வசதி வாய்ப்பு படைத்திருந்தவர்கள் இருந்தும், சொந்த ஊர் பெண் குழந்தைகள் திருக்குர்ஆனை கற்றுக்கொள்வதற்கும், பெண்கள் தொழுவதற்கும் ஒரு (இடம்) மதரஸா கட்டுவதற்கான எந்தவித முயற்சிகளும் மேற்கொள்ளவில்லை என்பதை கவனித்த, நடுத்தரமான குடும்ப பின்னணியில் வசித்து வந்த, தன் தாயை சிறுவயதிலேயே இழந்துவிட்ட, இதே கோபாலப்பட்டிணத்தை சார்ந்த 'ஆன மண்டை குடும்பத்தைச் சார்ந்த மர்ஹூம்.செய்யது அப்துர் ரஹ்மான் அவர்களின் மகனும், மர்ஹும் மு.செ.முஹம்மது அலியார் அவர்களின் மனைவி ஷம்சுமா ஹாஜிமா அவர்களின் தந்தையுமான மர்ஹூம்.ஹாஜி.மு.செ.மு.முஹம்மது ஹனீப் ஆலிம் அவர்கள் தனது சொந்த இடத்தில் சொந்த செலவில், தான் வசித்து வந்த வீட்டையும் விற்று அதன் செலவீனங்களுக்கு பயன்படுத்தி, நிர்மாணித்து, ரஹ்மானியா பெண்கள் மதரஸா என்ற பெயரில் 08.03.1970-ஆம் ஆண்டு வக்பு செய்தார்கள்.
அதன் பிறகு தான் நமது ஊரில் பெண் குழந்தைகளுக்காக குர்ஆன் பாடசாலை, பெண்களுக்காக தராவீஹ் மற்றும் பெருநாள் தொழுகை முறையாக பெண்கள் மதரஸாவில் நடக்கத் துவங்கியது. இதில் முக்கியத்துவம் என்னவென்றால் அன்றைய காலகட்டத்தில் ஒருவர் ஊருக்கு ஏதாவது வக்பு செய்கின்றார்கள் என்றால் இடத்தை கொடுப்பார்கள், வயலைக் கொடுப்பார்கள் அல்லது அதையும் தாண்டி பார்த்தால் ஒரு கட்டிடத்தை கட்டுவதற்கான செலவினத்தை கொடுப்பார்கள். ஆனால் இரண்டும் சேர்ந்தது போல் இடம் மற்றும் கட்டிடத்தை தனது சொந்த செலவிலேயே கட்டி வக்பு செய்தவர் தான் மர்ஹூம்.மு.செ.மு.முஹம்மது ஹனீப் ஆலிம் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் கடந்த 1984-ஆம் ஆண்டு இறைவனடி சென்று விட்டார்கள்.
ஹாஜி ஹனீப் ஆலிம் அவர்கள் தனது கடமையை கட்டிடம் கட்டி கொடுத்ததோடு விட்டுவிடாமல் தனது மகள் சம்சு நிஷா (மர்ஹூம்.முஹம்மது அலியார் அவர்களின் மனைவி) அவர்களை இதே மதரஸாவில் ஓதிக் கொடுக்கவும் வைத்தார்கள். மதரஸாவில் முப்பது ரூபாய் சம்பளம் முதல் 300 ரூபாய் சம்பளம் வரை பெற்று சுமார் 27 ஆண்டுகள் (1970-1997) வரை பணிபுரிந்தார்கள். மேலும் அவர்கள் ரஹ்மானியா பெண்கள் மதரஸாவின் முதல் ஆசிரியைகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப காலகட்டத்தில் பெண்கள் மதரஸாவிற்கான நிர்வாகத்தினை பெரிய மு.மு.அப்பா எனப்படுகின்ற மர்ஹூம்.ஹாஜி அப்துல்லாஹ் அவர்களும், அவர்களின் துனைவியார் மர்ஹூமா.அஹமதுமா ஹாஜிமா அவர்களும் திறம்பட சில காலங்கள் செய்து வந்தார்கள். (இவர்கள் மீரான் சேக்காதி, ஹாமீம் முஸ்தபா ஆலிம் மற்றும் பஷீர் அலி ஆகியோரின் பெற்றோர் ஆவார்கள்) பின்னர் ஊர் ஜமாத்தார்களின் நிர்வாகத்தின் கீழ் நேரடியாக வந்துவிட்டது.
இவ்வாறாக சில ஆண்டுகள் நடைபெற்று வந்த மதரஸா பின்னாளில் குழந்தைகள் அதிகமாகி இடப்பற்றாக்குறை ஏற்பட்டபோது, ஊர் ஜமாத்தினரால், மீமிசல் சிங்கப்பூர் ஜவுளி ஸ்டோர் உரிமையாளர் மர்ஹூம்.சாகுல் ஹமீது அவர்களுடைய தந்தை விளக்கெண்ணை பீஸ் எனப்படுகின்ற மர்ஹூம்.ஹபீப் முஹம்மது அவர்களிடமிருந்து அருகில் கொல்லையாக (செடிகொடிகள் நிறைந்ததாக) இருந்த இடத்தை ஊர் ஜமாத்தார்கள் வாங்கி முதல்முறையாக ரஹ்மானியா பெண்கள் மதரஸாவை விரிவுபடுத்தினர்.
சில காலம் செல்ல திரும்பவும் இடப்பற்றாக்குறை ஏற்பட, சுரக்கா அப்பா என்ற ஷாகுல் ஹமீது அவர்களின் மூத்த பேரனான ரபீக் அவர்களின் பாகத்தை ஊர் ஜமாத்தார்கள் வாங்கிஇரண்டாவது முறையாக விரிவுப்படுத்தினர்.
இக்கட்டிடம் 08.03.1970 அன்று வக்பு செய்த நாள் முதல் இடிக்கப்பட்ட நவம்பர் 2019 வரை இம்மூன்று இடங்களையும் சேர்த்தே ரஹ்மானியா பெண்கள் மதரஸா என்ற பெயரில் இயங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டிடம் பழுதடைந்து விட்ட காரணத்தால் இந்த இடத்தில் இருந்த ஓட்டு கட்டிடத்தை இடித்து விட்டு கடந்த 04.12.2019 அன்று புதிய கட்டிடம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டு புதிய கட்டிடப் பணி துவங்கி நிறைவு பெற்று கடந்த 12.05.2022 அன்று நூருல் அய்ன் என்ற பெயரில் திறப்பு விழா கண்டது. இதுவே ரஹ்மானியா மதரஸாவின் சுருக்கமான வரலாறு ஆகும்.
இந்த புதிய கட்டிடத்தை இதே கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த எனது பள்ளிக்கூட வகுப்பு நண்பர் தொழில் அதிபர் மு.மு.ஜகுபர் சாதிக் அவர்கள் தனது சொந்த பொருளாதாரத்தில் கட்டிடத்தை கட்டி ஊருக்கு அன்பளிப்பாக வழங்கி இருக்கிறார்.
அல்லாஹ் அவருக்கு சிறந்த கூலியையும், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உடல் ஆரோக்கியத்தையும் ஆயுளில் அபிவிருத்தியையும் வழங்கி அவரை பல செல்வந்தர்களுக்கு ஒரு முன் உதாரணமாக ஆக்கி வைப்பானாக ஆமீன்.
குறிப்பு: நமது நாளைய அடுத்தடுத்து வருகின்ற தலைமுறை தெரிந்து கொள்வதற்காக, புதிதாக கட்டப்பட்ட ரஹ்மானியா பெண்கள் மதரஸாவில், இப்பொழுது பொருத்தப்பட்டுள்ள கரும்பலகையில் இது போன்ற எந்த விவரங்களும் குறிப்பிடாமல் பெயர் மாற்றம் செய்து நேரடியாகவே நூருல் அய்ன் பெண்கள் மதரஸா என்ற பெயரிலேயே கல்வெட்டை பொருத்தியிருப்பது வருந்தத்தக்கது.
அதே சமயத்தில் இக்கட்டிடம் கட்டப்பட்ட இடத்தின் ஒருபகுதி ரஹ்மானியா பெண்கள் மதரசா என 55 ஆண்டுகளுக்கு முன்னர் வக்பு செய்யப்பட்ட இடத்தின் ஒரு பகுதி என கோபாலப்பட்டிணம் ஊர் ஜமாஅத்தார்கள் அனைவரும் அறிந்ததே.
அளவுக்கு அதிகமாக தன்னிடம் இருக்கின்ற செல்வத்தை அக்ககம்பக்கத்து வீட்டார்களுக்கு பகிர்ந்து கொடுப்பதற்கும், தனக்காக மட்டும் போதிய அளவுக்கு அல்லது அதைவிட குறைவாக உள்ள செல்வத்தை பொது நலன் கருதி பிறருக்கு அற்பணிப்பதற்கும் வேறுபாடுகள் உள்ளது.
அந்த வகையில் அக்கால கட்டத்தில் ரஹ்மானியா பெண்கள் மதரசாவை கட்டி அற்பணித்தவர் இரண்டாவது வகையைச் சார்ந்தவர் என்பதை இங்கு பதிவு செய்யவேண்டியிருக்கிறது. தனக்கென எந்த பெரிய வசதியோ அல்லது சொத்துகளோ இல்லாத சிரமமான சூழலில் தான் தனது ஊருக்காக ஒரு பெண்கள் மதரசா வேண்டுமென்று தனது சொந்த வீட்டையும் விற்று அதற்காக செலவழித்து ஒரு ரஹ்மானியா பெண்கள் மதரஸா என்ற கட்டிட அற்பணிப்பு அக்காலத்தில் உருவானது என்பது இக்காலகட்டத்தில் திரும்பத் திரும்ப பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.
இவ்வாறாக 51 ஆண்டுகளில் கடந்து வந்த பாதைகள் பற்றியும் அதன் அற்பணிப்புகள் பற்றியும் தியாகத்துடன் செயல்பட்டவர்கள் பற்றியும் அதற்காக பாடுபட்ட அனைத்து ஊர் நிர்வாகிகள் முதல் அடித்தொண்டன் வரை இதற்காக எந்த விதத்திலாவது உழைத்தவர்கள் பற்றியும் கண்டுகொள்ளாமல் அடுத்த தலைமுறையின் பார்வையை விட்டு மூடி மறைத்து ஊர் நிர்வாகத்தின் அனுமதிக்கு பின்னர் தான் பெயர் மாற்றம் நடந்தது என கடந்து செல்வது வருந்தத்தக்க செயல் என்பதில் எந்த நடுநிலையாளர்களிடமும் மாற்றுக் கருத்து இருக்காது.
அடுத்த 50 ஆண்டுகளுக்கு பின் வரும் தலைமுறைக்கு இன்று இக்கட்டிடத்தை ஊருக்கு அற்பணித்தவரின் முகம் தெரியாது, அதே சமயத்தில் இவரின் தியாகங்கள் பற்றி தெரிந்து கொள்ள இந்த கல்வெட்டு மட்டுமே ஒரு பாலமாக அமையும். மேலும் இதற்கு முன் வக்பு செய்தவரின் கல்வெட்டு அகற்றப்பட்டது போல் இவரது கல்வெட்டும் அகற்றப்பட்டு அடுத்து வருபவர் தன் பெயரை நிலைநாட்ட முயல்வார் இது போன்ற பிழைகளை இருதரப்பினரும் விரும்பத்தக்க விதத்தில் சரிப்படுத்தி கொண்டு செல்வது இன்றைய ஆளுமைமிக்க நடுநிலையாளர்களின் பொறுப்பு என்றால் மிகையாகாது.
இவ்வாறான பெயர் மாற்றங்களால் மட்டுமே முந்தைய வரலாறுகளை இளம் தலைமுறைகளை விட்டும் அழிக்க முடியும் என்ற ஒரே காரணத்தினால் தான் நமக்கு புரிந்தோ, புரியாமலோ இன்றைய இந்திய ஒன்றிய அரசு நாடு முழுவதும் பெயர் மாற்றங்களை நடாத்தி வருகிறது என்பதை நாம் பாசிசம் என்றே அழைக்கிறோம் என உரியவர்கள் புரிந்து கொள்வார்கள் என ஆதங்கத்துடன் தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது.
இப்படிக்கு..
மு.செ.மு.முஹம்மது ஹனிப் ஆலிம் அவர்களுடைய மகள் வழிப் பேரன் முஹம்மது இப்ராஹிம் அன்வாரி ஆலிம்
த/பெ மர்ஹூம் முஹம்மது அலியார்
08/03/2025
இந்த பதிவை இன்றைய தலைமுறைக்கு எடுத்து செல்வதில் GPM மீடியா பெருமை கொள்கிறது.
கடந்த ஐந்து வருடங்களாக GPM மீடியாவில் ரஹ்மானியா பெண்கள் மதரஸாவின் வரலாறை தொடர்ந்து பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மறப்பது மக்களின் இயல்பு அதை நினைவுபடுத்தி கொண்டிருப்பது GPM மீடியாவின் கடமை!
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.