நிறை பிறையில் நிரம்பும் சொந்தங்கள்: கோபாலப்பட்டிணத்தின் பாரம்பரிய 'நிறை பிறை' நினைவுகள் ஒரு மீள்பார்வை!



புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே எழில் கொஞ்சும் கடற்கரை கிராமமான கோபாலப்பட்டிணத்தில், ரமலான் மாதத்தை வரவேற்கும் விதமாக கொண்டாடப்படும் ‘நிறை பிறை’ நிகழ்வு, ஒரு காலத்தின் பொற்கால நினைவுகளாக இன்றும் முதியவர்களின் மனக்கண்ணில் நிழலாடுகிறது. இன்றைய இளைய தலைமுறைக்கு இந்த உன்னதமான கலாச்சாரத்தை நினைவூட்டுகிறது GPM மீடியா.

அரண்மனை தோப்பில் சங்கமித்த அன்பு
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை, நிறை பிறை நாள் அன்று கோபாலப்பட்டிணமே விழாக்கோலம் பூண்டிருக்கும். ரமலான் பிறை தெரிவதற்கு முந்தைய நாள், ஊரே திரண்டு அரண்மனை தோப்பிற்குப் படையெடுக்கும். வீடுகளில் சமைத்த சுவையான உணவுகளை டிபன் பாக்ஸில் கட்டிக்கொண்டு, குடும்பம் குடும்பமாக ஒன்று கூடுவார்கள்.

அங்கு ஒருவருக்கொருவர் உணவுகளைப் பரிமாறிக்கொள்வது வெறும் பசி ஆற்றுவதற்காக மட்டுமல்ல; அது உறவுகளைப் பலப்படுத்தும் ஒரு சடங்காகவே இருந்தது. ஆண்கள் கபடி விளையாடி மகிழ, சிறுமிகள் நொண்டி, சிப்பிங் மற்றும் கிளாச் விளையாடி அந்தப் பொழுதை உற்சாகமாகக் கழிப்பார்கள். வீடு திரும்பும்போது, ஊற்று நீரை குடங்களில் சுமந்து வருவார்கள்.

தோட்டத்து விருந்தும் கூட்டாஞ்சோறும்
ஒரு சில குடும்பங்கள் தங்களது சொந்தத் தோப்புகளுக்கோ அல்லது கொல்லைகளுக்கோ உறவினர்களை அழைத்துச் சென்று அங்கேயே 'கூட்டாஞ்சோறு' சமைப்பார்கள். சீசனுக்கு ஏற்றவாறு தோட்டத்தில் விளையும் பழங்களைப் பறித்து அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து மகிழ்வார்கள்.

மறுபுறம், சிறுவர்கள் தங்கள் வீட்டு மாடிகளில் சிறிய கொட்டகைகள் அமைத்து, பக்கத்து வீட்டுத் தோழர்களுடன் இணைந்து நிலாச் சோறு உண்பது போன்றதொரு உணர்வில் உணவருந்துவார்கள்.

சிறுவர்களின் தனி உலகம்: கருவேல மரக்காடுகளின் குட்டிச் சாம்ராஜ்யம்
அன்றைய காலகட்டத்தில் கருவேல மரங்கள் நிறைந்த பகுதிகளில் சிறுவர்கள் தங்களுக்கு என ஒரு சிறு உலகத்தையே உருவாக்கி வைத்திருப்பார்கள். நிறை பிறை அன்று அங்கு சென்று உணவுகளை உண்பார்கள். விடுமுறை நாட்களில் சீனி குச்சி காய்ச்சுவது, பால்கோவா கிண்டுவது என அவர்களின் குறும்புத்தனங்களுக்கு அளவே இருக்காது. இந்த 'குட்டி சாம்ராஜ்யத்திற்கு' காவலாக ஒரு நாய் குட்டியும் இருக்கும். அதற்குப் பரிமாறப்படும் கவனிப்புகளே தனி ரகம்!

தொழில்நுட்பம் பறித்த தருணங்கள்
நிறை பிறை என்ற வழக்கம் எப்படித் தொடங்கியது என்பதற்கான தெளிவான வரலாறு இல்லாவிட்டாலும், அது மக்களிடையே ஒற்றுமையை விதைத்தது என்பதில் ஐயமில்லை. ஆனால், இன்றைய 'ஸ்மார்ட் போன்' உலகில் அத்தகைய நெருக்கமான சந்திப்புகள் குறைந்து வருவது கவலைக்குரியது. இன்று ஒரு விருந்துக்குச் சென்றால், அனைவரும் ஆளுக்கொரு செல்போனை வைத்துக்கொண்டு அதிலேயே மூழ்கிக் கிடக்கிறோம். இந்த நிலையை மாற்றி, குடும்ப உறுப்பினர்களுடன் மனம் விட்டுப் பேசி மகிழ்வதே உண்மையான நிறை பிறை கொண்டாட்டமாகும்.

வண்டா எரித்த ரமலான் இரவு
ரமலான் மாதத்தின் கடைசி நாளில் பிறை தெரிந்ததும், சிறுவர்கள் சின்ன பள்ளிவாசல், கடற்கரை மற்றும் அரண்மனை தோப்பு போன்ற பகுதிகளில் 'வாண்டா' எரித்து, "நாளை பெருநாள்!" என ஆரவாரத்தோடு அறிவிப்பது அன்றைய காலத்து அறியாத வயது சந்தோஷங்களில் ஒன்று.

GPM மீடியாவின் வேண்டுகோள்
இந்த நிறை பிறை நிகழ்வு குறித்த கூடுதல் தகவல்களோ அல்லது அதன் வரலாற்றுப் பின்னணியோ உங்களுக்குத் தெரிந்தால், GPM மீடியாவிற்கு எழுதி அனுப்பலாம். அதேபோல், ஊரின் மற்ற வரலாற்றுப் பதிவுகள் மற்றும் இந்தப் பதிவில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் எங்களைத் தொடர்பு கொள்ளவும்: 918270282723

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments