12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: மாணவர்களுக்கான வெற்றிக் குறிப்புகளுடன் ஜிபிஎம் மீடியா வாழ்த்து!



தமிழகத்தில் இன்று மார்ச்-2 ஆம் தேதி 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் அனைவரும் மனப்பதற்றமின்றி தேர்வை எதிர்கொண்டு வெற்றிபெற, கோபாலப்பட்டிணம் மீடியா (GPM மீடியா) தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், தேர்வுக்கான முக்கிய ஆலோசனைகளையும் வழங்கியுள்ளது.


"முயற்சியும் பயிற்சியும் இருந்தால் தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம்"

தேர்வு என்பது மாணவர்களின் அறிவுத் திறனைச் சோதிப்பது மட்டுமல்லாமல், பள்ளிப் படிப்பில் தொடங்கி நுழைவுத் தேர்வு, போட்டித் தேர்வு என அனைத்திற்கும் அடித்தளமாகத் திகழ்கிறது. எனவே, தேர்வுகளை எப்படித் தயார் செய்து கொள்வது, எப்படிப் படிப்பது என்பது மிகவும் முக்கியம். தேர்வு நெருங்கும் நெருக்கத்தில் மாணவர்கள் மத்தியில் ஏற்படும் அச்சத்தைப் போக்கி, வெற்றிப் பாதையில் அவர்களை அழைத்துச் செல்லும் வகையில் இந்த குறிப்புகள் அமைந்துள்ளன.

மாணவர்களுக்கான 8 அத்தியாவசிய தேர்வுக் குறிப்புகள்:

1.குறிப்பேடுகள் அவசியம்
ஆண்டு தொடக்கத்தில் இருந்து நீங்கள் எடுத்த பாடக் குறிப்புகளைப் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். தேர்வுக்குப் படிக்கும்போது புத்தகத்தை முழுவதும் படிக்கப்போவதில்லை; முன்பே படித்தவற்றைத்தான் மீள்பார்வை செய்வீர்கள். எனவே, முக்கியக் குறிப்புகளை மட்டும் படித்தால் போதுமானது.

2.திட்டமிடுதல் வெற்றியைத் தரும்
வெற்றியை அடைய இலக்கும் திட்டமிடலும் அவசியம். பொதுத்தேர்வுக்கு முன் எத்தனை நாட்கள் உள்ளன, எந்தெந்த பாடங்களுக்கு எத்தனை நாட்கள் தேவை என்பதை முன்கூட்டியே திட்டமிடுங்கள். கடினமான பாடங்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்குங்கள்.

3.நல்ல உறக்கம், நல்ல மதிப்பெண்கள்
தேர்வுக்கு முந்தைய நாள் இரவு முழுவதும் தூங்காமல் படிப்பது பலனளிக்காது. குறைந்தபட்சம் ஆறு மணிநேரம் உறங்குவது அவசியம். இந்த உறக்கம் தேர்வறையில் சோர்வின்றி சிறப்பாக எழுத உதவும்.

4.வதந்திகளை நம்ப வேண்டாம்
தேர்வுக்கு முன்தினம் சமூக வலைதளங்களில் வினாத்தாள் கசிவு போன்ற வதந்திகள் பரப்பப்படும். இவற்றை நம்பி ஏமாற வேண்டாம். குறுக்கு வழியில் வெற்றியை அடைய முடியாது. முழு நம்பிக்கையோடு பாடங்களைப் படித்துத் தேர்வை எதிர்கொள்ளுங்கள்.

5.தேர்வு நாள் 
தேர்வு நாளன்று சீக்கிரம் எழுந்து, அன்றாட வேலைகளை முடித்துவிட்டு, காலை உணவைக் கண்டிப்பாகச் சாப்பிடுங்கள். நுழைவுச்சீட்டு, பேனா, பென்சில், அளவுகோல் போன்றவற்றைச் சரிபார்த்துக் கொண்டு, தேர்வுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே புறப்பட்டுச் செல்லுங்கள்.

6.தேர்வு எழுதுவதற்கு முன் 
தேர்வறைக்குச் செல்லும் முன் 10 நிமிடங்கள் புத்தகங்களை மூடிவைத்துவிட்டு, கண்களை மூடி அமைதியாக இருங்கள். தியானம் அல்லது மூச்சுப்பயிற்சி செய்து மனதை அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

7.நேர மேலாண்மை 
வினாத்தாளை வாங்கியதும் உடனே எழுதத் தொடங்காதீர்கள். வினாக்களை முழுவதுமாக ஒரு முறைக்கு இருமுறை வாசியுங்கள். முதலில் நன்கு தெரிந்த கேள்விகளுக்குப் பதிலளியுங்கள். ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண் வினாக்களுக்கு மதிப்பெண்களுக்கு ஏற்ப நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள்.

8.வினாத்தாள் பற்றிய கலந்துரையாடலைத் தவிர்த்தல்
ஒரு தேர்வு முடிந்ததும் நண்பர்களுடன் விடைகளைக் கலந்துரையாடுவது அடுத்த தேர்வில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். இது மனதில் கவலையை உருவாக்கி அடுத்த தேர்வையும் பாதிக்கும். எனவே, இதை முடிந்தவரை தவிர்க்கவும்.

முயற்சியும் பயிற்சியுமே வெற்றியின் அடித்தளம்

தேர்வுக்கு எப்படிப் படிப்பது, எவ்வாறு அதிக மதிப்பெண் பெறுவது போன்ற கேள்விகள் மாணவர்கள் மனதில் எழுவது இயற்கைதான். தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு முறையான பயிற்சியும், விடாமுயற்சியும் அவசியம். படிக்கும் போது பாடங்களைப் புரிந்து படிக்க வேண்டும். பாடத்திட்டத்தை நன்கு அறிந்து, ஒவ்வொரு பாடத்திற்கும் நேரம் ஒதுக்க வேண்டும். ஓய்வு நேரங்களில் மனப்பாடப் பகுதிகளைப் பார்ப்பதும், சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டுத் தெளிவதும் முக்கியம்.

படிப்பதற்கு அமைதியான சூழலைத் தேர்வு செய்ய வேண்டும். தனிமையான அறையோ, இயற்கைச் சூழலோ படிப்பதற்கு ஏற்றது. கணிதம் போன்ற கடினமான பாடங்களை நண்பர்களுடன் கலந்துரையாடிப் படிப்பது பயனுள்ளதாக இருக்கும்.

வாழ்வில் வெற்றி பெறுவது நீண்ட பயணம். தேர்வுகளில் வெற்றி பெறுவது அந்தப் பயணத்தின் ஒரு சிறு பகுதியே. வெற்றிக்குத் துணிவு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் இருந்தால் நிச்சயம் வெற்றி கிட்டும்.

தேர்வை எதிர்கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் ஜிபிஎம் மீடியா வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதோடு, மகிழ்ச்சியுடன் தேர்வெழுதி சிறந்த மதிப்பெண்கள் பெற வாழ்த்துகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments