புதுக்கோட்டையில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 18,901 மாணவ -மாணவிகள் எழுதினர் 234 பேர் வரவில்லை




புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 18,901 மாணவ -மாணவிகள் எழுதினர். 234 பேர் வரவில்லை.

பிளஸ்- 2 பொதுத்தேர்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வினை 8,678 மாணவர்களும், 10,429 மாணவிகளும் என 19,107 பேர் எழுத தகுதி பெற்றிருந்தனர். அவர்கள் தேர்வு எழுத 105 மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு முதல் தேர்வாக தமிழ் தேர்வு நேற்று நடைபெற்றது.

முன்னதாக காலை 9.30 மணியளவில் தேர்வின் போது மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆசிரியர்கள் எடுத்துக்கூறி ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும் எடுத்துரைத்தனர். தேர்வு நடக்கும் போது வெளியாட்கள் யாரும் உள்ளே வந்து விடாத வகையில் அனைத்து தேர்வு மையங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

தேர்வு எழுதினர்

தொடர்ந்து 9.45 மணியளவில் அறை கண்காணிப்பாளரின் சோதனைக்கு பிறகு மாணவ-மாணவிகள் தேர்வு அறைக்குள் சென்றனர். முன்னதாக அவர்களுக்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் வாழ்த்து கூறி அனுப்பி வைத்தனர். சரியாக 10 மணியளவில் வினாத்தாள் கட்டு பிரிக்கப்பட்டு அவர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.

10 நிமிடங்கள் வினாக்களை வாசிக்க நேரம் ஒதுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து விடைத்தாள் வழங்கியதும் அதில் கேட்கப்பட்ட விவரங்களை நிரப்பினர். 10.15 மணியளவில் மணி சத்தம் ஒலித்ததும் தேர்வினை மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் எழுத தொடங்கினர். இதில் 8,465 மாணவர்களும், 10,217 மாணவிகளும் என மொத்தம் 18,901 பேர் தேர்வினை எழுதினர். இதில் 130 மாணவர்களும், 86 மாணவிகளும், 18 தனித்தேர்வர்கள் என மொத்தம் 234 பேர் தேர்வு எழுத வரவில்லை.

கூடுதல் துறை அலுவலர்கள்

தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, மின்சார வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் தேர்வு மையங்களுக்கு சென்று வர பஸ் வசதி மாவட்ட நிர்வாகம் வழிகாட்டுதலின் பேரில் செய்யப்பட்டிருந்தன. மாவட்டங்களில் தேர்வு மையங்களில் ஆய்வு செய்ய முதன்மை கண்காணிப்பாளர்களாக தலைமை ஆசிரியர்களும், கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தேர்வு மையங்களுக்கு வினாத்தாளை பாதுகாப்பான முறையில் எடுத்து செல்ல 28 வழித்தட அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். தேர்வில் துண்டு சீட்டு வைத்து எழுதுதல், காப்பி அடித்தல், ஆள்மாறாட்டம் செய்தல், விடைத்தாள்-வினாத்தாளை மாற்றி எழுதுதல் உள்ளிட்டவற்றை கண்காணிக்க புதுக்கோட்டை மாவட்டத்தில் பறக்கும் படையினர் தேர்வு மையங்களை சுற்றி சுற்றி வந்து கண்காணித்தனர். காலை 10.15 மணிக்கு தொடங்கிய தேர்வு, மதியம் 1.15 மணிக்கு முடிவடைந்தது.

கலெக்டர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த பிளஸ்-2 அரசு பொதுத் தேர்வினை மாவட்ட கலெக்டர் அருணா ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சண்முகம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளிகளில் தேர்வு எழுத முடியாத சூழலில் இருந்த மாணவ-மாணவிகளுக்கு தேர்வு எழுத தனியாக சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் வினாக்களுக்கு விடை கூற சிறப்பாசிரியர்கள் தேர்வினை எழுதி கொடுத்தனர். அவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு அடுத்த தேர்வான ஆங்கில தேர்வு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடக்கிறது. வருகிற 26-ந்தேதியுடன் தேர்வு முடிவடைகிறது. தேர்வு முடிவுகள் வருகிற மே மாதம் 8-ந்தேதி வெளியிடப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments