வெப்ப அலை காரணமாக மதிய வேளையில் தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்த்து விடுங்கள் கலெக்டர் அருணா அறிவுறுத்தல்




புதுக்கோட்டை மாவட்டத்தில் வெப்ப அலை காரணமாக மதியம் 12 மணி முதல் 3 மணி வரை தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்த்து விடுங்கள் என்று கலெக்டர் அருணா அறிவுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வெப்ப அலை

உலக வெப்பமயமாதல் காரணமாக, உலக அளவில் புவியின் வெப்பநிலையானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் வெப்பநிலை தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் தற்காத்துக்கொள்ள வெப்ப அலை தொடர்பான விழிப்புணர்வு படிவங்கள் அந்தந்த பகுதி சுகாதார பணியாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி பொதுமக்கள் இலகுவான, வெளிர்நிற, தளர்வான மற்றும் நுண்துழைகள் கொண்ட பருத்தி ஆடைகளை அணியவும். வெயிலில் வெளியே செல்லும் போது பாதுகாப்பு கண்ணாடிகள், குடை, தொப்பி, காலணிகள் பயன்படுத்தப்பட வேண்டும். வெளிப்புற வெப்பநிலை அதிகமாக இருக்கும்போது கடினமான வேலைகள் செய்வதை தவிர்க்கவும், தேவையின்றி மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

உப்பு சர்க்கரை கரைசல்

பயணத்தின் போது குடிப்பதற்கு தண்ணீர் எடுத்து செல்ல வேண்டும். தாகம் இல்லா விட்டாலும் போதுமான அளவு தண்ணீர் முடிந்த வரை எடுத்துக்கொள்ள வேண்டும். உடலில் நீரிழப்பு ஏற்பட காரணமான, மது, தேநீர், காபி மற்றும் கார்பனேட் பானங்கள் மற்றும் அதிக புரதச்சத்து உள்ள உணவு வகைகள் தவிர்க்கப்பட வேண்டும்.

உப்பு சர்க்கரை கரைசல், வீட்டில் தயாரிக்கப்பட்டுள்ள லெஸ்சி, நீர்மோர் மற்றும் எலுமிச்சைச்சாறு போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். இது உடலில் மீண்டும் நீர்ச்சத்தை தக்கவைக்க உதவியாக அமையும். வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்கவும் திரைச்சீலைகள், ஷட்டர்கள் அல்லது சன்ஷேட்களைப் பயன்படுத்தவும். இரவு நேரங்களில் பாதுகாப்பாக ஜன்னல்களை திறந்து வைக்கவும். நிறுத்தப்பட்டுள்ள வாகனத்தில் குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளை அனுமதிக்க வேண்டாம்.

பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு...

வேலை நேரத்தில் யாராவது மயக்கம் அடைந்தால் உடனடியாக அவர்களை குளிர்ச்சியான மற்றும் நல்ல காற்றோட்டமான இடத்திற்கு அழைத்து வந்து தண்ணீர், உப்பு சர்க்கரை கரைசல் (ஓ.ஆர்.எஸ்.), வீட்டில் தயாரிக்கப்பட்ட பானங்களை கொடுக்க வேண்டும். அவசர தேவைகளுக்கு 108 ஆம்புலன்சை தொடர்பு கொள்ளவும். வெப்ப அலை தாக்கத்தில் பாதிக்கப்பட்ட நபரை உடனடியாக அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும்.

மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வெப்ப அலை பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தயார் நிலையில் போதுமான படுக்கைகள் மற்றும் ஓ.ஆர்.எஸ். பாக்கெட்டுகள் கையிருப்பில் உள்ளது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments