புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளின் த.வெ.க வேட்பாளர்கள் வாழ்க்கை குறிப்பு



புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளின் த.வெ.க.வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அதன் விவரம் மற்றும் அவர்களின் வாழ்க்கை குறிப்பி வருமாறு:-

அறந்தாங்கி

அறந்தாங்கி தொகுதி வேட்பாளரான ஜெ.முகமது பர்வேஸ் (வயது 31), புதுக்கோட்டை நிஜாம் காலனியை சேர்ந்தவர். பி.ஏ. எல்.எல்.பி. முடித்து வழக்கறிஞராக உள்ளார். இவரது தந்தை ஜாபர் அலி, அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வில் இருந்தவர். முகமது பர்வேஸ் த.வெ.க. புதுக்கோட்டை மாவட்ட தலைவராக உள்ளார். 2022-ல் புதுக்கோட்டை நகர்மன்ற உறுப்பினராக தேர்ந்தேடுக்கப்பட்டார். த.வெ.க. கட்சி தொடங்கிய பின் புதுக்கோட்டை மத்திய மாவட்ட செயலாளராகவும், தலைமை நிர்வாகக்குழு உறுப்பினராகவும், தெற்கு மண்டல ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினராகவும், தேர்தல் அறிக்கை குழு உறுப்பினராகவும், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், தஞ்சாவூர் மாவட்டங்களின் தேர்தல் இணை கண்காணிப்பாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை த.வெ.க. வேட்பாளர் கே.எம்.ஷரீப் (61). புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர். எம்.ஏ. முடித்துள்ளார். இவரது தந்தை காளித், தாய் பல்கீஸ். கே.எம்.ஷரீப்க்கு நூருல்லா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 1991-1998 வரை பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி தலைவராகவும், 2000 முதல் 2006 வரை பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராகவும், ம.தி.மு.க.வில் மாநில இலக்கிய அணி செயலாளராகவும் இருந்துள்ளார். பின்னர் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். கடந்த 2021 தேர்தலில் மக்கள் நீதி மையம் கூட்டணி கட்சி சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டுள்ளார். தற்போது த.வெ.க.வில் இணைந்து புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிடுகிறார்.

ஆலங்குடி

ஆலங்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் துரை கந்தசாமி (42). இவர் பி.ஏ., பி.எல்.முடித்துள்ளார். இவரது தந்தை துரைசாமி. துரை காந்தசாமிக்கு சிவமதி என்ற மனைவியும், ரோஷினி என்ற மகளும், துரை சரண் என்ற மகனும் உள்ளார். இவர் கடந்த 20 வருடமாக வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2024-ம் ஆண்டு த.வெ.க.வில் சேர்ந்து கட்சி பணியாற்றி வருகிறார்.

கந்தர்வகோட்டை

கந்தர்வகோட்டை (தனி) தொகுதி வேட்பாளர் சுப்பிரமணியன் (72). இவரது தந்தை நல்லான். சுப்பிரமணியனுக்கு ஆராயி என்ற மனைவியும், லாவண்யா என்ற மகளும், ராம்குமார் என்ற மகனும் உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம், நம்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். இவர், குளத்தூர் (தனி), தொகுதியில் 2006-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் தேர்தலில் வெற்றி பெற்றார். தொடர்ந்து 2011-ம் ஆண்டு கந்தர்வகோட்டை தொகுதி தனி தொகுதியாக மாறியபோது, அ.தி.மு.க. சார்பில் தேர்தலில் வெற்றி பெற்று ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக 5 ஆண்டு காலம் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அ.தி.மு.க.வின் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்தார். பிறகு மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்து பணியாற்றினார். தனக்கு அ.தி.மு.க.வில் வாய்ப்பு கிடைக்காது என தெரிந்து தன்னை த.வெ.க.வில் இணைந்தார்.

திருமயம்

திருமயம் தொகுதி த.வெ.க. வேட்பாளர் சிந்தாமணி (36). இவரது தந்தை சின்னையா. இவர் எம்.பி.ஏ. முடித்துள்ளார். இவரது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரியக்குடி பகுதியாகும். இவர் கடந்த 2024-ம் ஆண்டு த.வெ.க.வில் சேர்ந்தார்.

விராலிமலை

விராலிமலை தொகுதி வேட்பாளர் முருகேசன் (43). முருகேசனுக்கு பூமதி என்ற மனைவியும், தருண், முகிலன் என 2 மகன்கள் உள்ளனர். இவரது சொந்த ஊர் குன்றாண்டார்கோவில் வட்டாரத்தில் தாயினிப்பட்டி ஊராட்சி ஆகும். இவர் கடந்த 2008-2009-ம் ஆண்டுகளில் தே.மு.தி.க.வில் குன்றாண்டார்கோவில் ஒன்றிய செயலாளராக இருந்தார். பின்னர் தே.மு.தி.க.வில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். தற்போது த.வெ.க புதுக்கோட்டை வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளராக உள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments