புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் 97.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இதன்மூலம் தமிழகத்தில் முதல் இடம் பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.
97.57 சதவீதம் தேர்ச்சி
தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டத்தில் 335 பள்ளிகளை சேர்ந்த 11 ஆயிரத்து 215 மாணவர்களும், 11 ஆயிரத்து 122 மாணவிகளும் என மொத்தம் 22 ஆயிரத்து 337 பேர் தேர்வு எழுதினர். இதில் 10 ஆயிரத்து 826 மாணவர்களும், 10 ஆயிரத்து 968 மாணவிகளும் என மொத்தம் 21 ஆயிரத்து 794 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 97.57 சதவீதம் ஆகும். புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் கடந்த ஆண்டு (2025) 93.53 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதனை இந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது தேர்ச்சி விகிதம் 4.04 சதவீதம் கூடுதல் ஆகும்.
மாணவிகள் அதிகம்
தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதும் மாணவ-மாணவிகள் இணையதளத்தில் ஆர்வமுடன் பார்வையிட்டனர். மாணவ-மாணவிகள் தங்களது ஸ்மார்ட் போனில் இணையதள முகவரியில் தேர்வு முடிவுகளை பார்த்து மதிப்பெண்கள் விவரத்தை அறிந்தனர்.
தேர்ச்சி விகிதத்தில் மாணவர்கள் 96.53 சதவீதம் பேரும், மாணவிகள் 98.62 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர். இதனை ஒப்பிடும் போது மாணவர்களை விட மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
மாநில அளவில் முதல் இடம்
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவில் மாநில அளவில் தர வரிசை அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் முதல் இடத்தை பிடித்து வரலாற்று சாதனை படைத்தது. கடந்த ஆண்டு 93.53 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 25-வது இடத்தை பிடித்தது.
இந்த ஆண்டு 97.57 சதவீதம் தேர்ச்சி பெற்று அனைவரும் வியக்கும் வண்ணம் முதல் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் அடுத்து மேல்நிலை கல்வியான பிளஸ்-1 வகுப்பில் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து அதில் சேர விண்ணப்பிக்க தொடங்கினர்.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் புதுக்கோட்டை மாவட்டம் முதல் இடம் பிடித்து இருப்பது பெருமிதம் அளிக்கிறது என்று மாணவிகள் தெரிவித்தனர்.
மாநிலத்தில் முதல் இடம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் 97.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம் தமிழகத்தில் முதல் இடம் பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து மாணவிகள், தலைமை ஆசிரியர் கருத்துகள் தெரிவித்துள்ளனர். அதுகுறித்து வருமாறு:-
போஸ் நகர் பகுதியை சேர்ந்த யமுனா:- நான் புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறேன். 10-ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதல் இடம் பிடித்துள்ளேன். ரொம்ப சந்தோஷமாக இருக்கு. இதுக்கு எல்லாத்துக்குமே எங்க பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் தான் காரணம்.
நம்ம புதுக்கோட்டை மாவட்டம் 97 சதவீதத்திற்கு மேல் பெற்று மாநிலத்தில் முதல் இடம் பிடித்தது பெருமையாக உள்ளது. நல்ல முயற்சி செய்து படித்தால் நல்ல மதிப்பெண் வாங்கலாம்.
ஒத்துழைப்பு
பெரியார் நகர் பகுதியை சேர்ந்த ஹர்சினி:- நான் சராசரி மாணவிதான். பெற்றோர்மற்றும் ஆசிரியர்கள் எனக்கு உத்வேகம் கொடுத்து உறுதுணையாக இருந்தனர். அதனால் நன்றாக படித்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளேன். எப்படியும் படிக்கும் போது பதற்றம் இல்லாமல் படிக்க வேண்டும். படித்ததை அனைத்தையும் எழுதி பார்க்க வேண்டும். ஆசிரியர்கள் மிகவும் ஒத்துழைத்து எந்த சந்தேகம் இருந்தாலும் சொல்லி கொடுப்பார்கள். புதுக்கோட்டை மாவட்டம் முதல் இடம் வந்தது மகிழ்ச்சி அடைகிறேன். அனைவரும் நன்றாக படித்ததால் புதுக்கோட்டை முதல் இடம் வந்துள்ளது.
தமிழ் பாடம்
மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த ஹரிபிரியா:- நான் 10-ம் வகுப்பு தேர்வில் எங்கள் பள்ளியில் தமிழ் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளேன். எனது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் உறுதுணையாக இருந்தனர். அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நமது புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாட்டில் முதல் இடத்தில் வந்துள்ளது பெருமையாக உள்ளது.
வகுப்பு தேர்வு
புதுக்கோட்டை ராணியார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தமிழரசி:- இந்த ஆண்டு மிகச்சிறப்பாக தமிழ்நாட்டிலேயே முதலிடத்தை எங்களது புதுக்கோட்டை மாவட்டம் பெற்றுள்ளது. அதற்கு மிகவும் உறுதுணையாக முதன்மை கல்வி அலுவலர் சண்முகம் இருந்துள்ளார். அவர் முழு நேரமும் நீங்கள் படிக்கணும், பள்ளி மாணவர்களுக்கு வகுப்பு தேர்வு வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் மாவட்டம் தோறும் ஒவ்வொரு பள்ளிகளுக்கு வருகை தந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே அறிவுரை கூறினார். அதனை பின்பற்றி காலை, மாலை சிறப்பு வகுப்புகள் மற்றும் வார இறுதி நாட்களிலும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டது.
இதில் ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். இதனால் தேர்ச்சி விகிதம் அதிகரித்து மாநிலத்தில் முதல் இடம் பெற்றது. மேலும் குறிப்பாக மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் அளவில் 97.09 சதவீத தேர்ச்சியுடன் 2-வது இடம் பிடித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அதில் ராணியார் மேல் நிலைப்பள்ளி 2-ம் இடம் பிடித்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.