ஆவுடையார்கோவில் ஒன்றியம் செங்கானம்- தென்னமாரி இணைப்பு சாலை சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு




ஆவுடையார்கோவில் ஒன்றியம் செங்கானம்- தென்னமாரி இணைப்பு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

முக்கிய போக்குவரத்து

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட செங்கானம் ஊராட்சியில் உள்ள செங்கானம் - தென்னமாரி இணைப்பு சாலை முற்றிலும் சேதமடைந்து போக்குவரத்திற்கு உபயோகம் இல்லாமல் மாறியுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் (100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம்) கீழ் இந்த செங்கானம் - தென்னமாரி இணைப்பு சாலை முதன்முதலாக அமைக்கப்பட்டது. கிராம மக்களின் முக்கிய போக்குவரத்து தேவையாக இருந்த இந்த சாலையை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து, கடந்த 2020-ம் ஆண்டு இந்த சாலையை மேம்படுத்தும் பணி தொடங்கப்பட்டது. ஆனால், சாலையை மேம்படுத்துவதாகக் கூறி தார் சாலையாக மாற்றாமல், வெறும் மண்சாலையாக மட்டுமே மாற்றி பணிகளை அரைகுறையாக முடித்துள்ளனர்.

5 கிலோமீட்டர் தூரம் சுற்றி...

தற்போது இந்த 2 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலையில் பதிக்கப்பட்ட ஜல்லிக்கற்கள் அனைத்தும் பெயர்ந்து, ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. இதனால் இந்த சாலையில் இருசக்கர வாகனங்கள் கூட பயணிக்க முடியாத அளவுக்கு மோசமடைந்துள்ளது. அவசரத்திற்கு ஒரு ஆம்புலன்ஸ் கூட உள்ளே வர முடியாத அவல நிலை உள்ளது." சாலை மோசமாக உள்ளதால், செங்கானம் மற்றும் தென்னமாரிமங்களம் கிராம மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு நேராக செல்ல முடியாமல், சுமார் 5 கிலோமீட்டர் தூரம் சுற்றி பயணிக்க வேண்டி உள்ளது.

கிராம ரேஷன் கடைக்கு வரக் கூடிய அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்கள் நீண்ட தூரம் சுற்றி வர வேண்டியுள்ளது. இதனால் பொருட்கள் வினியோகமும் தாமதமாகிறது. இந்த பகுதி விவசாய மக்கள் தங்களது விளைபொருட்களை சந்தைக்குக் கொண்டு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். வாகன ஓட்டிகள் இந்த பகுதிக்கு வர மறுப்பதால் கூடுதல் வாடகை தர வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

சீரமைக்க வேண்டும்

இதுகுறித்து தென்னமாரிமங்களம், செங்கானம் பொதுமக்கள் கூறுகையில், இந்த 2 கிலோ மீட்டர் சாலையை சீரமைக்க கோரி பலமுறை ஆவுடையார்கோவில் ஒன்றிய அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மனுக்கள் அளித்துவிட்டோம். அதிகாரிகள், விரைவில் சீர்செய்யப்படும் என வெறும் உறுதிமொழிகளை மட்டுமே தருகிறார்களே தவிர, இதுவரை எந்தவொரு களப்பணியும் நடக்கவில்லை. பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள இந்த 2 கிலோ மீட்டர் இணைப்பு சாலையை உடனடியாக சீரமைத்து, தார் சாலையாகவோ அல்லது சிமெண்டு சாலையாகவோ தரம் உயர்த்தி தர நடவடிக்க எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments