கோட்டைப்பட்டினம் அருகே மீனவர் அடித்துக் கொலை 5 பேர் கைது




மணமேல்குடி அருகே மீனவரை அடித்துக்கொலை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

மீனவர்
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே கோட்டைப்பட்டினத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒருவர் காயங்களுடன் இறந்து கிடந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கோட்டைப்பட்டினம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இறந்து கிடந்தவர் ராமநாதபுரம் மாவட்டம் சின்ன ஏர்வாடி சேர்மன் தெருவை சேர்ந்த வேடசாமி என்கிற ரவி (வயது 38) என்பது தெரியவந்தது. மேலும் இவர் கோட்டைப்பட்டினம் பகுதியில் விசைப்படகுகளில் மீன்பிடிக்க செல்வதும், மற்ற நாட்களில் அப்பகுதியில் உள்ள இடத்தில் தங்கி இருந்ததும், அந்த இடத்திேலயே அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததும் தெரியவந்தது.

தகராறு
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், கோட்டைப்பட்டினம் சகோதரபுரம் பகுதியை சேர்ந்த கண்ணன் மகன்கள் பார்த்திபன் (35), பிரியன் (25), ராஜாகுமார் (19), வேலாயுதம் மகன் அஜித்குமார் (28), ராம் நகரை சேர்ந்த அழகர்சாமி என்கிற பவளக்கொத்தான் (25) ஆகிய 5 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சம்பவத்தன்று நாங்கள் 5 பேரும் ஒரு இடத்தில் மது குடித்து கொண்டிருந்தோம்.

அப்போது அங்கு வந்த ரவி, நான் தூங்குற இடத்தில் அமர்ந்து மது குடிக்கிறீங்களே, நான் தூங்கனும் கிளம்புங்க' என்று கூறியுள்ளார். மதுகுடித்து விட்டு போறோம்னு சொன்னோம். அதை ரவி கேட்காததால் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரவி மதுபாட்டிலை எடுத்து பார்த்திபனை தாக்கியதில் அவர் காயமடைந்தார். பின்னர் நாங்கள் அனைவரும் பார்த்திபனை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு சென்று விட்டோம்.

5 பேர் கைது
இதற்கிடையே அம்மாபட்டினம் கடை வீதியில் நின்றிருந்த ரவியை மோட்டார் சைக்கிளில் தகராறு நடந்த இடத்திற்கே அழைத்து வந்து தாக்கினோம். இதில் அவர் மயங்கினார். பின்னர் நாங்கள் அனைவரும் அங்கிருந்து சென்று விட்டோம். அதன்பிறகு தான் ரவி இறந்தது எங்களுக்கு தெரியவந்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments