கிருஷ்ணாஜிபட்டினத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தெருமுனை கூட்டம்: 7 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!



புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிபட்டினம் கடைத்தெருவில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) கிருஷ்ணாஜிபட்டினம் கிளை சார்பாக "அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி" பத்து மாத செயல் திட்டத்தை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை (19.07.2026) அன்று மாலை எழுச்சிமிகு தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

​தலைமை மற்றும் முன்னிலை
இக்கூட்டத்திற்கு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட துணைச் செயலாளர் சைபுல் கரீம் தலைமை வகித்தார். கிருஷ்ணாஜிபட்டினம் கிளைத் தலைவர் M.M. நைனா முகமது, செயலாளர் M. சல்மான் கான், பொருளாளர் ஹசன் நூருதீன், துணைத் தலைவர் ஷாஜகான், துணைச் செயலாளர் ஹஜ் முகம்மது மற்றும் மாணவரணி நிர்வாகி ஹாரூன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்புரை
கூட்டத்தில் மாநில பேச்சாளர்கள் K.M.A. முகம்மது மக்தூம் தவ்ஹீதி மற்றும் T. முகம்மது தன்ஜில் (MISC) ஆகியோர் கலந்துகொண்டு, அண்ணல் நபிகளாரின் வாழ்வியல் நெறிகள் மற்றும் தற்போதைய சமூகச் சூழல்கள் குறித்து சிறப்புரையாற்றினர். இதில் திரளான ஆண்களும் பெண்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் பின்வருமாறு:

வந்தே மாதரம்-மூன்றாண்டு சிறைத் தண்டணை
தேசிய பாடலை வந்தே மாதரத்தை மறுத்தால் அல்லது  அவமதித்தால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை என்கின்ற மசோதாவை வரும் மழைக்கால கூட்டத் தொடரில் நிறைவேற்ற உள்ளதாக செய்திகள் வருகின்றன  இந்த மசோதா இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது.

இந்திய நாட்டை ஹிந்து மதக் கடவுள்களோடு ஒப்பிட்டு பாடப்படும் இந்த பாடலை ஒரு முஸ்லிம் பாட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதும் அதை பாடத் தவறும் போது அதன் மேல் தண்டனை என்று சொல்வதும் மிகப் பெரிய அநீதி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தங்களுக்குத் தேவையான உரிமையை சிறுபான்மையினர் எனக் கோரும் இந்திய ஹிந்துக்கள் தங்கள் தேசத்தில் வாழும் தேசப்பற்றுள்ள முஸ்லிம்களின் மீது தங்கள் மத நம்பிக்கையை திணிப்பது எந்த வகையில் நியாயம் எனும் கேள்வி எழுகின்றது.

இந்திய மக்களை மதத்தின் பெயரால் தொடர்ந்து பிரிக்க முயலும் ஒன்றிய பாஜக அரசை இந்த தெருமுனை கூட்டத்தின்  வாயிலாக வன்மையாக கண்டிக்கின்றோம்.

தமிழகத்தில் மாட்டிறைச்சி அரசியல்
திருவொற்றியூர் நகரத்தில் அமைந்துள்ள மாட்டு இறைச்சி கடைகளை மூட வேண்டும் என கடந்த வியாழக்கிழமை இந்துத்துவா அமைப்பினர் ரகளையில் ஈடுபட்டுள்ளனர் அவர்களை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்தது பெரிய அதிருப்தியை இஸ்லாமியர்கள் மத்தியில் உருவாக்கி இருக்கிறது.

இந்தியாவில் அவரவர் விரும்பிய உணவை அவரவர் உண்ணலாம் என்கின்ற சூழல் இருக்கும்போது மற்றவர்கள் எதை உணவாக  உண்ண வேண்டும் என்று பாஜகவினர் தீர்மானிப்பது அயோக்கியத்தனத்தின் உச்சம்.

எப்போது பிரச்சனை ஏற்படுத்தலாம் எனும் நோக்கத்தில் சங்க பரிவாரங்கள் அலையக்கூடிய  சூழலில் அதை கண்டும் காணாமல் தமிழக காவல்துறை இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது இதுபோன்று சமூகவிரோத சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் அவர்களினுடைய செயல்பாடுகளை முளையிலேயே கிள்ளி எறியும் நடவடிக்கைகளை தமிழ்கஅ அரசு எடுக்க  வேண்டும்.

இந்த பிரச்சினையில் தொடர்புடைய இந்துத்துவா அமைப்பினர் கைது செய்யப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கையை இந்த கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

தமிழகத்தில் ரெஸ்டோபர்கள்_சோறு திங்கும் இடத்திலும் மது
உணவு உண்டு கொண்டே மதுபானம் குடிப்பது போன்ற ரெஸ்ட் ரோபர்கள் வட இந்தியாவிலும் மேலை நாடுகளிலும் இருப்பதை கேள்விப்பட்டிருக்கிறோம் இது போன்றவற்றை தமிழகம் முழுவதும் திறப்பதற்கான அனுமதியை தமிழக அரசாங்கம் வழங்கப் போகிறது என்கின்ற செய்தி வந்து உள்ளது.

தமிழர்களை குடிகாரர்களாக மாற்றுவதில் எத்தனை வீரியத்தோடு இந்த அரசு செயல்படுகிறது என்பதையே இது காட்டுகிறது குடிப்பதை வெறுப்பதும் குடிப்பதை அவமானமாக கருதுவதும் என்கின்ற நிலை மாறி , குடி என்பது அன்றாட வாழ்க்கையின் ஒரு நிலையாக உருவாகி விடுமேயானால் அது மிகவும் மோசமானது இந்த சமூகத்திற்கு எதிரானது.

ஏழை எளிய மக்களை அன்றாடம் வாட்டி வதைக்கும் இந்த மது கொடுமையை தமிழகத்தில் இருந்து முழுமையாக நீக்க கூடிய வகையில் முழுமையான மதுவிலக்கு என்கின்ற கோரிக்கைய மக்கள் வைத்துக் கொண்டிருக்கக் கூடிய ஒரு சூழலில்  ரெஸ்டோபார்கள் என்கின்ற பெயரில் உணவோடு சேர்ந்து மதுவும் பரிமாறப்படக்கூடிய ஒரு முறை என்பது தமிழகத்தின் கலாச்சாரத்தை சீரழிப்பதோடு கொஞ்சம் நஞ்சம் நல்லவர்களையும் நாசமாக்கிவிடும் என்கின்ற காரணத்தை கருத்தில் கொண்டு இந்த பார்களை அனுமதிக்க கூடாது என்று இந்த கூட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொள்கின்றோம்.

நாய்கள் தொல்லை
நேற்றைய தினம் திருப்பூர் மாவட்டத்தின் அவிநாசியிலும், சென்னையிலும் என இரண்டு இடங்களில் ஐந்து வயதிற்கும் குறைவான குழந்தைகள் இரண்டு பேர் தெரு நாய்களால் கடிக்கப்பட்டு உள்ளனர்,  நான்கைந்து தெரு நாய்கள் சேர்ந்து அந்த குழந்தைகளை கடித்துள்ளன,  அதில் திருப்பூரை சார்ந்த சிறுவன் மிக ஆபத்தான நிலையில் ஐசியூ வில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

தமிழகத்தில் தெருநாய் தொல்லை என்பது எல்லை தாண்டி சென்று கொண்டிருக்கிறது இங்கே பல நபர்கள் இன்னும் அரசினுடைய உத்தரவுகளை மீறி பொது இடங்களில்  அந்த நாய்களுக்கு உணவு வழங்கி வளர்க்கும் சூழல் உள்ளது, இவ்வாறு வளர்க்கப்படும் நாய்கள் தெருவில் இருக்கக்கூடிய மற்றவர்களை கடித்து குதறுவதும், துரத்துவதும், வாகன ஓட்டிகளை கடிக்கப்பாய்வதும்,  பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளை பார்த்து குறைப்பதும் என பல சம்பவங்கள் அரங்கேறி நடக்கின்றன.

ராபிஸ் நோயால் மரணித்தவர்களுடைய எண்ணிக்கை தமிழகத்தில் பெரிய அளவிற்கு உயர்ந்திருக்கிறது  ஏற்கனவே நீதிமன்றம் வழங்கியிருக்கக்கூடிய உத்தரவுகளை தமிழக அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்தி சட்ட விரோதமாக தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிப்பவர்களை கைதுசெய்ய வேண்டும் , ஆளில்லாத பகுதிகளில் கொண்டு போய் அந்த நாய்களை விடுவதும் அவற்றிற்கு கருத்தடை நடவடிக்கைகளை செய்வதையும் தமிழக அரசாங்கம் வேகப்படுத்த வேண்டும் என்று இந்த கூட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொள்கின்றோம்.

VBSA சட்ட மசோதா
விக்சித் பாரத்  சிக்ஷா அபிஷ்தான் எனும் பெயரில் (VBSA) எனும் பெயரில் இந்தியாவில் உள்ள அனைத்து உயர்கல்வி  நிறுவனங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதற்கு ஒன்றிய பாஜக அரசாங்கம் முயன்று பாராளுமன்றத்தில் ஒரு மசோதாவை தாக்கல் செய்து இருந்தது, அது சட்டமாக வாய்ப்புள்ளாதாக செய்திகள் வருகின்றன.

இந்த சட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து உயர்கல்வி நிறுவனங்களையும் ஒரு அமைப்பு கட்டுப்படுத்துவது UGC, மருத்துவம்,  அறிவியல்,  தொழில்நுட்பம்,  என்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக நிறுவனங்கள் இருக்கக்கூடிய நேரத்தில் அனைத்தையும் ஒற்றை அமைப்பாக மாற்றுவது   தேவையற்ற தாமதத்திற்கும் ஏதேச்சதிகார நடவடிக்கைகளுக்கும் வழிவகுக்கும் மசோதாவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று இந்த கூட்டத்தின் வாயிலாக ஒன்றிய அரசை வலியுறுத்துகின்றோம்.

இஸ்லாத்திற்கு மதம் மாறியவர்களின் உரிமையை பாதுகாப்பது
இஸ்லாமிய மதத்திற்கு மாறுபவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்களுக்கான (BCM) இடஒதுக்கீட்டுச் சலுகையை கோர முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ததற்கு பதிலாக, கூடுதல் நபர்கள் கொண்ட அமர்விற்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பரிந்துரைக்க வேண்டும், மேலும் இவ்விடஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில்  வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் சட்டம் இயக்க வேண்டும் என இந்த தெருமுனை கூட்டத்தின்  வாயிலாக கோரிக்கை வைக்கின்றோம்.

முஸ்லிம்களின் இடஒதுக்கீடு
தமிழகத்தில் வாழும் இஸ்லாமியர்கள் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், பொருளாதாரத்திலும் மற்ற சமூகங்களை விட பின் தங்கிய நிலையிலேயே உள்ளனர் , தனது தேர்தல் அறிக்கையில் சச்சார் கமிட்டியின் பரிந்துரைகளை நிறைவேற்ற குரல்கொடுப்போம் என்று சொல்லி உள்ள தவெக அரசு இஸ்லாமிய சமுதாயத்தின் நீண்ட கால கோரிக்கையான தனி இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும் என இந்தக்கூட்டத்தின்  வாயிலாக கேட்டுக்கொள்கின்றோம்.

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments