திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு ஏன்?- தமிமுன் அன்சாரி விளக்கம்



மக்களவைத் தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது குறித்து மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''மக்களவைத் தேர்தலை கொள்கைக்கான களமாகவே பார்க்கிறோம். பிரச்சினைகள் வந்து விடக்கூடாது. வாக்குகள் சிதறி, பிரிந்துவிடக் கூடாது என்பதால் நாங்கள் தேர்தலில் போட்டியிடவில்லை. அகில இந்தியத் தேர்தல் என்பதால் மதச்சார்பற்ற சமூக நீதி சக்திகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதால் திமுக - காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு தார்மீக அடிப்படையில் எங்கள் ஆதரவைத் தெரிவிக்கிறோம்.

பாஜகவுக்கு மாற்று காங்கிரஸ்தான். நாடு முழுவதும் மோடிக்கு எதிராக எதிர்ப்பலை வலுத்து வருகிறது. தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றும். 30க்கும் அதிகமான இடங்களில் இக்கூட்டணி வெற்றி பெறும்'' என்று தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி 2016 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக இரு அணிகளாகப் பிரிந்தது. அப்போது மக்கள் கைகாட்டும் அணிக்கே தனது ஆதரவு என்று சொன்ன தமிமுன் அன்சாரி இறுதியில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பின்போது வாக்களித்தார்.

அதிமுக- பாஜக கூட்டணிக்கான பேச்சுவார்த்தையின்போதே தமிமுன் அன்சாரி எதிர்ப்பு தெரிவித்தார். அதிமுக பாஜகவுடன் கூட்டணி சேர்வது மாநில நலனுக்கு எதிரானது என்றும், தமிழக மக்கள் விருப்பத்துக்கு எதிரானது என்றும் தெரிவித்ததோடு கூட்டணி முடிவை அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அப்படி ஒரு கூட்டணி அமைந்தால் நாங்கள் தமிழர்களுக்கு எதிரான அக்கூட்டணியில் இடம்பெற மாட்டோம் என்றும் உறுதியாகக் கூறினார்.

அதிமுக - பாஜக கூட்டணி உறுதியான பிறகு, இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட தமிமுன் அன்சாரி, ''வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் அமையும் கூட்டணியில் நாங்கள் இடம்பெறமாட்டோம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்.

சமூக நீதி, சமூக நல்லிணக்கம், சமத்துவ ஜனநாயகம் என்பது எமது கொள்கையாகும். தமிழகத்தின் வாழ்வாதாரங்கள், தமிழர் உரிமைகள், பின்தங்கிய சமூகங்களின் நலன்கள் ஆகியவற்றை முன்வைத்தே எமது அரசியல் தொடரும். மனிதநேய ஜனநாயகக் கட்சியின் அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து வரும் 28-ம் தேதி சென்னையில் கூடும் தலைமை நிர்வாகக் குழுவில் முடிவு எடுக்கப்படும்'' என்று தெரிவித்தார்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு தமிமுன் அன்சாரி ஆதரவு தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments