திருநாவுக்கரசருக்கு ராமநாதபுரம் கிடைக்குமா?



ராமநாதபுரம் தொகுதியை முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை கேட்பதால் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசருக்கு அத்தொகுதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட விரும்புகிறார். 1999-ல் எம்ஜிஆர் அதிமுக சார்பில் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு வென்ற அவர், பாஜகவில் இணைந்து மத்திய இணை அமைச்சர் ஆனார். 2004 மக்களவைத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை.

தொகுதி மறுவரையரைக்குப் பிறகு புதுக்கோட்டை தொகுதி நீக்கப்பட்டது. அதனால், 2009-ல் பாஜக சார்பில் ராமநாதபுரத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்த திருநாவுக்கரசர், பின்னர் காங்கிரஸில் இணைந்தார். 2014-ல்காங்கிரஸ் சார்பில் அதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது 3-வது முறையாக ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட விரும்புகிறார். தனது விருப்பத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல், தமிழக பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் ஆகியோரிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் ராமநாதபுரம் தொகுதியைக் கேட்டுள்ளது. முஸ்லிம் லீக் பலமுறை வென்ற வேலூர் தொகுதியை திமுக பொருளாளர் துரைமுருகன் தனது மகன் கதிர் ஆனந்துக்காக கேட்டு வருகிறார். 2014 தேர்தலிலேயே இத்தொகுதியை மகனுக்காக துரைமுருகன் கேட்டும் கிடைக்கவில்லை. இந்த முறை வேலூர் தொகுதியைப் பெறுவதில் அவர் உறுதியாக உள்ளார்.

இதனால் முஸ்லிம் லீக், தங்களுக்கு ராமநாதபுரத்தை ஒதுக்குமாறு திமுகவிடம் கோரியுள்ளது. மனிதநேய மக்கள் கட்சியும் ராமநாதபுரத்தை கேட்டுள்ளது. முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சிவகங்கையில் போட்டியிட உள்ளார். எனவே, சிவகங்கைக்கு அருகில் உள்ள ராமநாதபுரம் தொகுதியை வேறு கட்சிக்கு திமுக ஒதுக்கக்கூடும் என்ற செய்தியும் பரவியது. இதனால் திருநாவுக்கரசருக்கு ராமநாதபுரம் கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது.

Post a Comment

0 Comments