புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கான கடனுதவி முகாம்கள் தொடக்கம். மாவட்ட ஆட்சியர் தகவல்தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் ரூ. ஒரு கோடி மதிப்பில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கடனுதவித் திட்டங்களுக்கான சிறப்பு முகாம்கள் வியாழக்கிழமை முதல் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பி உமாமகேஸ்வரி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியது:

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின்  மூலம்  செயல்படுத்தப்படும் தனி நபர் கடன் திட்டம், சுய உதவிக் குழுக்களுக்கான சிறு தொழில் கடன் திட்டம், கல்விக் கடன் திட்டம், கறவை மாடு கடன்,  ஆட்டோ கடன் ஆகியவற்றுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

கறம்பக்குடி வட்டத்தில் வரும் ஜூலை 18 முற்பகல் 11 மணிக்கும்,
ஆலங்குடி வட்டத்தில் ஜூலை 19 பிற்பகல் 3 மணிக்கும்,
இலுப்பூர் வட்டத்தில் ஜூலை 20 முற்பகல் 11 மணிக்கும்,
அறந்தாங்கி வட்டத்தில் ஜூலை 23 முற்பகல் 11 மணிக்கும்,
பொன்னமராவதி வட்டத்தில் ஜூலை 24 முற்பகல் 11 மணிக்கும்,
மணமேல்குடி வட்டத்தில் ஜூலை 26 முற்பகல் 11 மணிக்கும்  இம்முகாம்கள் நடைபெற உள்ளன.

திட்டம் 1இன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1. 20 லட்சத்துக்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98 ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.  திட்டம் 2இன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 6 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மேலும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1இல் ரூ.20 லட்சம் வரையிலும், திட்டம் 2இல் ரூ.30 லட்சம் வரையிலும் 3 சதவிகித  வட்டி விகிதத்திலும் கல்விக் கடன் வழங்கப்படுகிறது. 

எனவே, இம்மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் சிறுபான்மையினர் சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு கடன் விண்ணப்பங்களை பெற்று உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி: தினமணி

Post a Comment

0 Comments